பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

அறைக்குள் மங்கலாக எரிந்து கொண்டிருந்த தீபச் சுடரின் நுனியைத் தூண்டிவிட்டாள். சுடர் குதித்தெழுந்தது. ஒளியும், வனப்பும் மிக்க அந்த அறையின் பொருட்கள் தீப ஒளியில் கவர்ச்சி செறிந்து காட்சி அளித்தன. எத்தனைவிதமான யாழ்கள்? எவ்வளவு வகை மத்தளங்கள்? இன்னும் இசை, நாட்டியக் கலைகளில் பயிற்சியுள்ளவர்கள் பயன்படுத்தும் வகை வகையான நளினகலைக் கருவிகள் நாற்புறமும் அறையில் தென்பட்டன. குழல்வாய்மொழி தீபத்தின் கீழே அமர்ந்து திருமுகத்தைப் பிரித்தாள். தந்தையின் திருமுகத்தையே பார்ப்பதுபோல் அவள் விழிகளில் பயபக்தி ஒளிர்ந்தது.

“ஒருவர் மற்றொருவருக்கு எழுத்து மூலம் எழுதி அனுப்பும் செய்திக்குத் தமிழில் ‘திருமுகம்’ என்று எவ்வளவு பொருத்தமாகப் பெயரிட்டிருக்கிறார்கள்! ஒருவர் எழுதியதைப் படிக்கும்போது படிக்கிறவருக்கு எழுதியவரின் முகம் தானே நினைவுக்கு வருகிறது!”

தந்தையின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டபோது பெயர்ப் பொருத்தத்தைப் பற்றிய இந்த அழகிய கற்பனையும் அவளுக்குத் தோன்றியது. திருமுகத்தைப் படிக்கலானாள்.

“அருமைப் புதல்வி குழல்வாய்மொழிக்கு, எல்லா நலங்களும் பெருகுக, மங்கலங்கள் யாவும் பொலிக செல்வக் குமாரி! என்னுடைய இந்தத் திருமுகத்தை படிக்கத் தொடங்கும் முன் படித்துக்கொண்டிருக்கும் போது, படித்தபின் ஒவ்வொரு நிலையிலும் உன் மனத்தில் எந்தெந்த உணர்ச்சிகள் அலைமோதும் என்பதை இதை எழுதும் முன்னாலேயே இங்கிருந்தே என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஆனாலும் எழுத வேண்டியதையெல்லாம் உனக்கு எழுதித்தான் ஆகவேண்டும்.

எப்போதுமே உன் தந்தைக்கு வியப்பு உணர்ச்சி குறைவு என்பது உனக்குத் தெரியும். எதையும் எதற்காகவும், ஆச்சரியமாகக் கருதாமல் சர்வ சாதராணமாக நினைப்பவனுக்கு அதிசயங்களிலும் அபூர்வ அற்புதங்களிலும் எப்படி ஈடுபாடு இருக்கமுடியும்? ஆச்சரியம் எவ்வாறு ஏற்பட முடியும்? உணர்ச்சி மயமாகவே வாழ்பவர்களால் வாழ்க்கையில் எதிலும்