பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

35


மண்டலேசுவரரின் மாளிகைக்குத் தென்புறம் கண்ணுக்கெட்டிய வரை நெடுந்துாரத்துக்கு நெடுந்துாரம் ஒரே தண்ணிர்ப் பிரவாகமாகத் தெரிந்த பறளியாற்றின் இக்கரையில் வந்து தளபதியின் குதிரை நின்றது. பூமிக்குக் குடை பிடித்ததுபோல் பரந்து வளர்ந்திருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் அவனும் அவன் ஏறிக் கொண்டு வந்த குதிரையும் நின்றபோது, நிலா மேகத்தில் மறைந்து மெல்லிய இருள் பரவியது. கரையோரத்து ஆலமரத்தின் அடர்த்தியால் முன்பே ஒளி மங்கியிருந்த அந்த இடம் இன்னும் அதிகமாக இருண்டது.

ஆற்றில் தண்ணிர் குறைவாக ஓடினால் நனைந்தாலும் பரவாயில்லையென்று குதிரையையும் பிடித்துக் கொண்டு இறங்கி நடந்து அக்கரையிலுள்ள மாளிகைக்குச் சென்றுவிட முடியும். ஆனால் ஆற்றில் அப்போது ஆள் இறங்க முடியாத வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. தளபதி தன் குதிரையை மரத்தடியிலேயே நிறுத்திவிட்டுக் கரையின் விளிம்பருகே சென்று ஆற்றின் நிலையை நிதானிக்க முயன்றான். இரு தினங்களாக நாஞ்சில் நாட்டு மலைத் தொடர்களில் நல்ல மழை பெய்திருந்ததனால் பறளியாற்றில் நீர் இரு கரையும் நிமிர ஓடிக் கொண்டிருந்தது. இறங்கிப் போவதென்பது சாத்தியமில்லை என்று தெரிந்தது வல்லாளதேவனுக்கு திரும்பி வந்தான். குதிரையை ஆலமரத்தின் வேரில் கட்டி விட்டு நின்றான்.

இதற்கு முன்பு இத்தகைய திகைப்புக்குரிய அநுபவம் நாஞ்சில் நாட்டுப் படைத்தலைவனுக்கு ஏற்பட்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேற்கே சிறிது துரம் கரையோரமாகவே நடந்தால் இடையாற்று மங்கலம் மண்டலேசுவரர் மாளிகைக்குத் தோணி விடும் துறை இருந்தது. தோணித் துறையில் தொண்டாற்றும் அம்பலவன் வேளான் துறையில் இருக்கிறானோ, இல்லையோ, பெரும்பாலும் இரவு ஏழெட்டு நாழிகைக்குள் தோணிப் போக்குவரத்து முடிந்து விடும். அதன்பின் படகுடன் அக்கரையிலேயே தங்கிவிடுவது வேளானின் வழக்கம். பகலில் வந்திருந்தால் இடையாற்று மங்கலம் போவதற்கு இவ்வளவு