பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

377


துறைமுகத்தில் இறங்கியதும் உடனே இங்கு வருமாறு கூறியிருக்கிறேன். தாமதமின்றி இங்கே கூப்பிட்டுக்கொண்டு வருவதற்குத் துறைமுகத்துக்கே ஆட்களை அனுப்பி எதிர் பார்த்துக்கொண்டு காத்திருக்கச் செய்திருக்கிறேன்.”

“தென்பாண்டி நாட்டில் சுற்றிக்கொண்டிருக்கும் நம் ஒற்றர்கள் போதுமான செய்திகளை அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னிர்களே, அந்தச் செய்திகளை யெல்லாம் நாங்களும் அறிந்துகொள்ளலாமோ?”

அரசூருடையானின் இந்தக் கேள்விக்குச் சோழன் சிரித்துக்கொண்டே பதில் கூறினான்:

“நம்முடைய புதிய நண்பர்கள் இருவரும் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சேர்த்துக் கேட்பதுபோல் பழைய நண்பர்கள் கேள்விகளைக் கேட்கிறார்கள். யோசனைகளைக் கூறுகிறார்கள். நம் அரசூருடைய சென்னிப் பேரரையர் கேட்பதற்கு முன் தென்பாண்டி நாட்டிலிருந்து ஒற்றர்கள் மூலம் கிடைக்கும் செய்திகளை நானே விரிவாகச் சொல்ல வேண்டு மென்றிருந்தேன். அதற்கு முன்னால் உங்களையெல்லாம் கலந்தாலோசித்துக் கொள்ளாமல் நான் செய்திருக்கும் ஒரு சில செயல்களுக்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ‘நாம் மிக விரைவில் படையெடுத்துவிடப் போகிறோம் என்ற பெரும் பீதியைத் தென்பாண்டி நாடு எங்ஙனும் உண்டாக்குவதற்காக ஒரு தந்திரம் செய்தேன். நம் வீரர்களை வணிகர்கள் போலவும், தலயாத்திரை செய்பவர்களை போலவும் நிறைய அனுப்பியிருக்கிறேன். தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லையான கரவந்தபுரத்துப் பகுதிகளில் நம் ஆட்கள் திடீர் திடீரென்று கலகங்களையும், குழப்பங்களையும் செய்து போர் நெருங்கி வருவதுபோல அச்சுறுத்துகிறார்கள். கொற்கையில் நடந்த முத்துக்குளி விழாவின்போது நம்மிடமிருந்து போன ஆட்கள் உண்டாக்கிய கலவரம் தென்பாண்டி நாட்டையே நடுங்கச் செய்திருக்கிறது. வட எல்லைக் காவலனும், கரவந்தபுரத்து அரசனுமாகிய பெரும்பெயர்ச்சாத்தன் அஞ்சிப்போய்