பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


தெய்வ நீதிமன்றம் அந்தக் கோவிலின் வேறொரு பகுதியில் இருந்தது. ஏக்கத்தோடும், அனுதாபத்தோடும் நிராசையோடும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார் மகாராணி. கூட்டம் திரள்திரளாகத் தெய்வ நீதிமன்றம் இருந்த பகுதிக்குள் சென்று கொண்டிருந்தது. இவ்வளவு கூட்டமும் கைமுக்குத் தண்டனையை வேடிக்கை பார்க்கப் போகிறது. ஆனால் இவ்வளவு பேரும் அடையாத சோக உணர்ச்சி தண்டனை அடைந்தவனைப் பெற்ற தாய்க்கு மட்டும் ஏற்படுகிறது. உலகத்துக்கு வேடிக்கை. தாய்க்கு வேதனை. தாயாக இருந்தால் எத்தனை துன்பங்கள்? ஆனாலும் தாயாக இருப்பதில்தான் எவ்வளவு பெருமை !

யாரையோ அடிப்பதற்காக ஓங்கிய கை, யார் மேலேயோ விழுந்ததுபோல், எந்தத் தாயையோ நினைத்துக்கொண்டு அர்ச்சகர் கூறிய அந்த வாக்கியம் தம் இதயத்தையே கசக்கிப் பிழிவதை வானவன்மாதேவி உணர முடிந்தது. அந்த விநாடி வானவன்மாதேவியின் மனத்தில் மின்னலைப் போல் ஓர் எண்ணம் உண்டாயிற்று. முகம் மலர விழிகளில் சத்தியம் ஒளிர அர்ச்சகரை நிமிர்ந்து பார்த்தார்.

“அர்ச்சகரே! நீங்கள் எனக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கடந்து உள்ளே போய்க் கைமுக்குத் தண்டனை நிறைவேறும் இடத்தில் நான் இங்கு வந்திருப்பதை வெளிக்காட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. நீங்கள் தயவுசெய்து, இந்தப் பணிப் பெண்ணையும் உடன் அழைத்துச் சென்று அந்தச் சோழிய நங்கையை மட்டும் இங்கே தனியாகக் கூப்பிட்டுக்கொண்டு . வர ஏற்பாடு செய்யுங்கள்.”

அர்ச்சகருக்கு மகாராணியின் அந்த வேண்டுகோள் ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு, “அப்படியே அழைத்து வரமுயல்கிறேன் தேவி” என்று கூறி புவனமோகினியையும் உடன் அழைத்துக் கொண்டு கூட்டத்துக்குள் புகுந்தார். சந்நிதிக்கு முன் தனியாக நின்ற மகாராணி பிறருடைய கவனம் தம்மால் கவரப்படக் கூடாதென்று நினைத்து யாரோ தரிசனத்துக்கு