பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பாண்டிமாதேவி / முதல் பாகம்


இவ்வளவையும் செய்து முடித்து விட்டு அவன் கன்னியாகுமரியிலிருந்து இடையாற்று மங்கலம் புறப்படும்போது இரவு பதினோரு நாழிகைக்கு மேலாகி விட்டது. அப்படிப் புறப்படுவதற்கு முன் கோவில் தீபத்தின் ஒளியில் தனியாக மீண்டும் ஒரு முறை ஒற்றணிடமிருந்து கிடைத்த அந்த ஒலையைப் படித்தபோதுதான் தளபதியின் இதயத்தில் அதன் விளைவான பயங்கரமும் கொடிய சூழ்நிலையும் நன்றாக உறைத்தன. ‘மகாராணி இந்தத் திருமுகத்தைப் படிக்காமல் கொடுத்ததும் ஒருவகைக்கு நல்லதுதான். கூடுமானால் மகா மண்டலேசுரரிடம்கூட இந்த ஒலையைப் பற்றிக் குறிப்பிடாமல் இருப்பது நல்லது! -என்ற முடிவான தீர்மானத்தோடுதான் மகாமண்ட லேசுவரரைச் சந்திப்பதற்குக் கிளம்பியிருந்தான் அவன்.

பறளியாற்றங்கரை ஆலமரத்தடியில் குதிரையைக் கட்டிவிட்டுத் தோணித் துறையை நோக்கித் தாழை மரக் கூட்டத்தின் இடையே வளைந்து வளைந்து செல்லம் குறுகிய பாதையில் நடந்து கொண்டே அன்று மாலையில் நிகழ்ந்தவற்றை யெல்லாம் மீண்டும் மேற்கண்டவாறு நினைத்துப் பார்த்துக் கொண்டான் தளபதி வல்லாளதேவன். தோணித்துறையை நெருங்கியபோது அங்கே தீப்பந்தங்களின் வெளிச்சமும், பேச்சுக் குரல்களும் இருப்பதைக் கண்டு அவன் முகம் மலர்ந்தது. தன் நம்பிக்கை வீண் போகாமல் காப்பாற்றியதற்காகத் தெய்வத்துக்கு நன்றி செலுத்திக் கொண்டே துறையில் இறங்கினான். தோணி அக்கரைக்குப் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது.

அதில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்தபோதுதான் தளபதியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை! தோணியே இருக்காது இந்த நள்ளிரவில் என்று அவநம்பிக்கையோடு அங்கு வந்த அவன் தோணியையும் அதைச் செலுத்தும் படகோட்டி அம்பலவன் வேளானையும் மட்டும் பார்த்திருந்தால்கூட அவ்வாறு ஆச்சரியப்பட்டிருக்க மாட்டான்.