பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


போதெல்லாம் உண்மைகளை அடைகிற தகுதியும் வருகிறது. புவனமோகினி! இந்த மாதிரித் தத்துவங்களெல்லாம் உனக்குப் புரியாது. என்றாலும் சொல்லுகிறேன். மெய்யைத் தெரிந்துகொள்வதற்கு நூல்களைப் படித்தலும் அறிவுரைகளைக் கேட்டலுமே போதுமான கருவிகளென்று பல பேர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உலகத்துத் துன்பங்களையெல்லாம் உணர்ந்துணர்ந்து உருகி அழுகின்ற மனம் வேண்டும். உள்ளம் உருகி அழுதால் உண்மை விளங்கும். நெஞ்சம் கலங்கிக் குமுறினால் நியாயம் பிறக்கும். பிறவி என்ற பிணிவாசனை தொலைக்கும் மணிவாசகர் ஒரே வாக்கியத்தில் இதை, “அழுதால் உன்னைப் பெறலாமே” என்று விளக்குகிறார். இப்போது சில சமயங்களில் இறைவனைப் பெறுவதற்கு அழுவதைவிட நம்மைப் புரிந்துகொள்வதற்கே நாம் அழுதாக வேண்டும். நான் அழுகின்ற அழுகை உண்மையை அறிந்தும், அறிய முயன்றும் அழுவதே தவிர வேறென்று நீ வருந்தவேண்டாம்.”

மகாராணியின் இந்தச் சொற்களைக் கேட்டதும் புவன மோகினிக்கு ஒரு சிலிர்ப்பு உடல் முழுவதும் பரவியது. கண்களில் பக்திப் பரவசத்தின் ஒளி சுடர்க்கோடிட்டது. மின்னல் மின்னும் நேரத்தில், ஒரு கணத்தின் ஒருசிறு பகுதிப் பொழுதில், அந்த வண்ணமகளின் கண்களுக்கு முன்னால் மகாராணி வானவன்மாதேவியாரின் கண்ணிர் சிந்திய முகம் தெரியவில்லை. நீலத்திரைக் கடலோரத்திலே கோலக் கன்னிமை யெனும் தவம் பூண்டு நிற்கும் வாலைக்குமரி வடிவம் சிவிகையினுள் வந்தமர்ந்துகொண்டு “ஐயோ! தலைமுறைக்குத் தலைமுறை உலகில் தாய்க் குலத்தின் துன்பங்கள் பெருகி வருகின்ற்னவே” என்று கதறிக் குமுறிக் கலங்கியழுவதுபோல் ஒரு பொய்த் தோற்றம்- ஒரு பிரமைக் காட்சி-புவனமோகினியின் கண்களுக்கு முன்பு தெரிந்து மறைந்தது. புவனமோகினி தன் வசமிழந்த நிலையில் அந்த ஒருகணம் உடலெங்கும் பரவி நின்ற எல்லையற்ற பரவசத்தினால் என்ன செய்கிறோமென்ற நினைவேயின்றி