பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

447

“நமக்குள் நம் நன்மைக்காக ஒற்றுமையாக இருக்கவேண்டு மென்று நினைக்கிற ஒவ்வொரு கூட்டமும், ஒவ்வொரு இனமும், அடுத்தவர்கள் அப்படி ஒற்றுமையாக இருக்க விடாமல் செய்யவே முயல்கிறது. வடக்கே நமக்குள் பெருங் கூட்டணி ஒன்று அமைத்து நாம் உடன்படிக்கை செய்து கொள்கிற மாதிரி தெற்கேயும் செய்ய நினைப்பார்கள் அல்லவா?” என்று குறும்புத்தனமாக–ஆனால் கோபத்தோடு–மறுமொழி சொன்னான் கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன்.

“எனக்கென்னவோ இப்படித் தோன்றுகிறது; தெற்கே அவர்கள் மூவரும் ஒன்றுபடுவதால் படைப்பலம் பெருகினாலும் அதைப்பற்றி நாம் கவலைகொள்ள வேண்டியது இல்லை. நம் ஐவருடைய உடன்படிக்கையும், ஒற்றுமையும் சாதிக்கிறதைவிட அவர்கள் அதிகமாகச் சாதித்துவிட முடியாது!” என்று பரதூருடையானின் கருத்து வெளிப்பட்டது.

“யார் என்ன வேண்டுமானாலும் கூறுங்கள். முன்பு உறையூரில் நடந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் நான் கூறி ஏற்பாடு செய்த திட்டப்படி எல்லாம் நடந்திருந்தால் இப்போது இப்படியெல்லாம் நடந்திருக்காது. இந்தப் புதிய கவலைகளும் கிளம்பியிருக்க வழியில்லை” என்று சிறிது படபடப்போடு பேசிய கொடும்பாளூர் மன்னனைச் சோழன் கையமர்த்தி நிறுத்தினான். “நாம் என்ன செய்ய முடியும்? உங்கள் திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு குமார பாண்டியனையும், மகாராணியையும், ஒழித்து விடுவதற்கு ஆட்களை அனுப்பினோம். மகாராணியைக் கொலை செய்யும் முயற்சியும், இடையாற்றுமங்கலம் நம்பியை நம்மவராக ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் சாத்தியமில்லை என்று ஆகிவிட்டது. உங்கள் திட்டத்தில் ஒரே ஓர் அம்சத்தைப்பற்றிய முடிவுதான் இன்னும் தெரியவில்லை, அதாவது குமாரபாண்டியனைக் கொல்வதற்காகத் தேடிச் சென்றவர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்களும் திரும்பி வந்துவிட்டால் உங்கள் திட்டம் முழு வெற்றியா, அல்லது முழுத்