பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

448

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

தோல்வியா என்பது தெரிந்துவிடும்” என்று சோழன் விவரமாகப் பதில் கூறியபின்பே கொடும்பாளுரானின் படபடப்பு அடங்கியது. அப்படியிருந்தும் அவன் விட்டுக்கொடுக்காமல் பேசினான்:—“என் திட்டம் தோல்வியா, வெற்றியா என்பதற்காக இங்கு வாதிடுகிற நோக்கம் எனக்கு இல்லை. நம்முடைய கனவுகள் விரைவில் நனவாகவேண்டும் என்பதற்காகத்தான் அந்தத் திட்டத்தைக்கூடச் சொன்னேன். இளவரசன் இராசசிம்மனும், மகாராணி வானவன்மாதேவியும் உயிரோடு இருக்கிறவரை சேரர் படை உதவி, இலங்கைப் படை உதவி முதலிய உதவிகளெல்லாம் தென்பாண்டி நாட்டுக்குக் கிடைத்தே தீரும். பாண்டிய மரபின் எஞ்சிய இரு உயிர்களான மகாராணியும், இளவரசனும் அழிந்து போய்விட்டால் அதன் பின்னர் மகாமண்டலேசுவரருக்காகவோ, தளபதி வல்லாள தேவனுக்காகவோ, கரவந்தபுரத்தானுக்காகவோ யாரும் படை உதவி செய்யமாட்டார்கள். உதவியற்ற அந்தச் சூழ்நிலையில் மிக எளிதாகத் தென்பாண்டி நாட்டை நாம் கைப்பற்றிவிடலாம். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தையே அப்போது நான் கூறினேன்.”

“இப்போதும் காரியம் ஒன்றும் கைமீறிப் போய்விடவில்லை. இராசசிம்மனைத் தேடிச் சென்ற நம் ஆட்கள் காரியத்தை முடித்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும். இராசசிம்மனே இறந்தபின் தென்பாண்டி நாட்டுக்கு எவன் படை உதவி செய்யப்போகிறான்?" என்று கூறிய அரசூருடையானை வன்மையாக எதிர்த்துப் பேசினான் கண்டன் அமுதன். “அரசூருடைய சென்னிப் பேரரையரே நீங்கள் இப்போது போடுகிற கணக்குத்தான் தப்புக் கணக்கு இராசசிம்மன் இருப்பதால் எவ்வளவு கெடுதலோ அதைப்போல் நான்கு மடங்கு கெடுதல் அவன் இறப்பதால் ஏற்படும். அவன் உயிருக்குயிராகப் பழகும் இலங்கைக் காசிபனும், பாட்டனாகிய சேரனும் அவனுடைய சாவுக்கு வட திசையரசராகிய நாம் காரணமாயிருந்தோமென்று அறிந்துகொள்ள நேர்ந்தால் எவ்வளவு கொதிப்படைவார்கள் என்று நினைத்துப் பாருங்கள்! அந்தக் கொதிப்பின் பயன் யார் தலையில் விடியுமென்று நீங்கள்