பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

488

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


தளபதி. அப்படியே இறங்கி ஓடிப்போய்க் குழைக்காதன் கொண்டு வரும் செய்திகளை அங்கேயே அவனை நிறுத்தித் தெரிந்து கொண்டு விட வேண்டும் போலிருந்தது. பல்லாயிரக்கணக்கான படைவீரர்கள் தனக்கு மரியாதை செய்வதற்காகக் கூடி அணிவகுத்து நிற்கும் சூழ்நிலையை உணர்ந்து அப்படி இறங்கிச் செல்லாமல் சமாளித்துக் கொண்டான். பெரிய சூழ்நிலைகளில் சிறிய ஆசைகளை அடக்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

முரச மேடைமேல் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த படையணித் தலைவர்களில் ஒருவனைக் குறிப்புக் காட்டி அருகே அழைத்தான். “அதோ, வாயிற்புறமாகக் குதிரையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கும் ஆபத்துதவிகள் தலைவனை நேரே இங்கே அழைத்து வா” என்று சொல்லி அனுப்பி வைத்தான். அவன் மேடையிலிருந்து இறங்கி வேகமாக வாயிற் பக்கம் நடந்தான். அந்த மாபெரும் அணிவகுப்பின் நடுவே-அசையாது நிற்கும் சிலைகளைப் போன்று வரிசை வரிசையாக நிற்கும் வீரர்களை வகிர்ந்துகொண்டு ஒரே ஒர் ஆள் நடந்து சென்றது, நெற்குவியலினிடையே ஒரே ஓர் எறும்பு ஊர்கிற மாதிரித் தெரிந்தது. உயரமான மேடை மேலிருந்து பார்க்கும்போது தளபதிக்கு அப்படித் தான் மனத்துக்குள் உவமை தோன்றியது. அத்தனை ஆயிரம் வீரர்களின் கூட்டத்தில் மூச்சுவிடுகிற ஒசையாவது கேட்க வேண்டுமே! அவ்வளவு அமைதி. தளபதி என்ற ஒரு மனிதனுக்கு அத்தனை மனிதர்களும் கட்டுப்படவேண்டியிருக்கிறது. அவ்னுடைய ஒரு சுட்டு விரலின் அசைவுக்குக்கூட அந்தக் கூட்டத்தில் விளைவு உண்டு. இதை நினைத்துக் கொண்டபோது திடீரென்று தான் மிகமிகப் பெரியவனாக மாறி உயர்ந்து விட்டது போலவும் அந்த உயரத்தின் நீண்ட நிழலில் மகாமண்டலேசுவரர் என்ற அறிவின் கூர்மை சிறியதோர் அணுவாய்த் தேய்ந்து குறுகி மங்கி மறைந்துவிட்டது போலவும் தளபதி வல்லாளதேவனுக்கு ஒரு பொய்யான பூரிப்பு ஏற்பட்டது. ஒரே ஒரு கணம்தான் அந்தப் பூரிப்பு நிலைத்தது. அடுத்த கணம் ஆழங்காண முடியாத மகாமண்டலேசுவரரின் அந்தக் கண்களும், ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் எட்டுத்திசையை உணர்ந்து