பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

497


நோக்கத்தில் படுவதில்லையா? அல்லது மனிதர்களையும், சுற்றுப்புறத்தையும் அளந்து பார்த்து விளங்கிக்கொள்ளும் ஆற்றல் என்னுடைய மென்மையான மனத்துக்கு இல்லாமல் போய்விட்டதா என்று திகைத்தார் மகாராணி வானவன்மாதேவியார்,

அந்தச் சமயத்தில் புவனமோகினி, கழற்கால் மாறனாரை கூட்டிக்கொண்டு வந்து நிறுத்தினாள். தென்பாண்டி நாட்டின் ஐம்பெருங் கூற்றத் தலைவர்களுக்குள் செல்வாக்கு மிகுந்தவரும் பொன்மனைக் கூற்றத்துத் தலைவரும், வயது மூத்தவரும் தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்தவேளார் என்ற சிறப்புப்பட்டம் பெற்றவரும் ஆகிய கழற்கால் மாறனார் முன்வந்து மகாராணியை வணங்கினார். அவர் கையில் உறையிட்டு இலைச்சினை பொறித்த ஒலைச் சுருள் இருந்தது. அவருடைய வயதுக்கும், அநுபவத்துக்கும் மரியாதை கொடுத்து எழுந்து நின்று வணங்கினார் மகாராணி.

“வரவேண்டும், பெரியவரே! அதிகாலையில் சிரமப்பட்டு வந்திருக்கிறீர்கள். அரசாங்க காரியமாக இருக்குமானால் மகாமண்டலேசுவரரைப் பார்த்தாலே போதுமான தென்றுதான் உங்களை அவரிடம் அழைத்துப்போகச் சொன்னேன். நீங்கள் என்னையே பார்க்க வேண்டுமென்று கூறினீர்களாம்.”

“ஆமாம்! நான் பார்க்க வந்தது தென்பாண்டி நாட்டு மகாராணியாரைத்தான்” என்று கழற்கால் மாறனார் கூறிய பதிலில் கடுமையும், சிறிது அழுத்தமும் ஒலித்தாற்போல் தோன்றியது மகாராணிக்கு.

“அது சரிதான்! ஆனால் ஓர் அரசாங்கக் காரியமாக என்னைச் சந்தித்து நீங்கள் அடைய முடிந்த பயனைக் காட்டிலும் மகாமண்டலேசுவரரைச் சந்தித்து அதிகமான பயனை அடையலாமே என்பதற்காகத்தான் சொன்னேன்.”

"இல்லை மகாராணி! நாங்கள் இனி என்றுமே மகாமண்டலேசுவரர் என்ற முறையில் அந்தப் பதவியில் வைத்து அவரைச் சந்திக்க விரும்பவில்லை. காரணம், அவர் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய செயல்களையும் நாங்கள் புரிந்துகொள்ள முடிவதில்லை.”


பா. தே. 32