பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


வேகத்தினால் இழுத்துக் கொண்டுபோகிற அளவுக்கு இப்போது வெள்ளம் கடுமையாக இராது. ஆகவே கவிழ்ந்து மூழ்கிய ஆயுதங்களைப் பெரும்பாலும் குறைவின்றி எடுத்து விடலாம். அவ்வாறு எடுத்த ஆயுதங்களையும், இப்போது நான் உன்னிடம் எழுதிக்கொடுக்கப்போகும் ஒலையையும் கொண்டுபோய் நேரே கோட்டாற்றுப் படைத்தளத்தில் இருக்கும் தளபதி வல்லாளதேவனிடம் சேர்த்துவிட வேண்டும்.”

“அப்படியே செய்துவிடுகிறேன். சுவாமி!” “செய்வது பெரிதில்லை, வேளான்! நான் சொல்கிறபடி கவனமாக நடந்து கொள்ளவேண்டும். என் ஒலையையும் ஆயுதங்களையும் தளபதியிடம் கொடுத்தபின் அங்கே ஒரு நொடிப்போதுகூட அநாவசியமாக நீ தாமதிக்கக் கூடாது. தளபதி உன்னிடம் தூண்டித் துளைத்து ஏதாவது கேட்க முயன்றாலும் நீ அவற்றுக்கு மறுமொழி கூறாமல் உடனே நழுவி வந்துவிட வேண்டும்.”

வேளான் பயபக்தி நிறைந்த முகத்தில் மிரண்ட பார்வையோடு, ஆகட்டும் என்பதற்கு அறிகுறியாக மகா மண்டலேசுவரருக்கு முன் தலையசைத்தான்.

‘சரி, அப்படியானால் நீ இப்போதே புறப்பட வேண்டியதுதான்” என்று அவர் விடைகொடுத்த பின்பும் அவன் தயங்கி நின்றான். எதையோ அவரிடம் கேட்கலாமா, வேண்டாமா என்று தனக்குள்ளேயே எண்ணப் போராட்டத்துடன் அவன் தயங்கி நிற்பதாகத் தோன்றியது. “வேளான்! ஏன் தயங்கி நிற்கிறாய்? மனத்தில் பட்டதைக் கேள்!”

“சுவாமீ! அந்தப் பட்டுத் துணியிலிருந்து ஏதாவது அடையாளம் புரிந்ததா?” என்று மென்று விழுங்கும் வார்த்தைகளோடு பயந்துகொண்டே கேட்டான் அவன்.

“அடையாளமெல்லாம் நன்றாகத்தான் புரிந்திருக்கிறது. ஆனால் அதை நீ இப்போது தெரிந்துகொள்ள வேண்டு மென்கிற அவசியமில்லை” என்று புன்னகையோடு பதில் கூறினார் மகாமண்டலேசுவரர். வேளான் மறுபேச்சுப் பேச வாயின்றித் தளபதிக்காக அவர் எழுதிக்கொடுத்த ஒலையை