பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


இந்த ஓர் உயிருக்காகவே இப்படி மயங்கிச் சோர்கிறாயே! போ! உன் காரியத்தைப் பார்க்கக் கிளம்பு” என்றார்.

சிறிது நேரத்தில் மழையாலும், காற்றாலும், சிதைந்த காட்டு வழியில் அவர்கள் குதிரைப் பயணம் தொடங்கியது. காலக் கனலெரியில் வேம் வாழி நெஞ்சே என்ற புத்த பிட்சுவின் சொற்கள் மனத்தளத்திலிருந்து நீங்காமல் ஒலிக் கூத்தாட சிந்தனை கவியும் மனத்தோடே சென்றான் குமாரபாண்டியன். நடு வழியில் நிகழ்ந்த அந்தத் துயர நிகழ்ச்சி பொலன்னறுவையிலிருந்து புறப்படும்போதிருந்த உற்சாகத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டது. புத்த பிட்சுவின் வார்த்தைகள், வாழ்க்கையின் முழுமையைப்பற்றி அவன் முதல் நாள் நினைத்த அதே நினைவுகளை வேறொரு விதத்தில் அவனுக்குத் திருப்பிக் கூறுவதுபோல் ஒலித்தன.

அந்த வார்த்தைகளை நினைத்துக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தான் அவன். இந்தச் சோக நிகழ்ச்சியை உண்டாக்குவதற்கென்றே நேற்று மழையும், காற்றும் வந்தனவா? இந்தச் சோகத்தை எதிர்பார்த்தே நேற்றிரவு அவன் மனத்தில் வாழ்வின் முழுமையைப் பற்றிய அந்தத் தோற்றங்கள் உண்டாயினவா? ஒன்றும் புரியவில்லை. அப்போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவர்போல் சக்கசேனாபதியும் பேசாமல் உடன் வந்து கொண்டிருந்தார்.

அவர்களிருவரும் தமனன் தோட்டத்துக் கப்பல்துறையை அடைவதற்குச் சிறிது தொலைவு இருக்கும்போதே ஈழ நாட்டுக் கப்பற் படை வீரர்கள் சிலர் எதிரே வந்து அவர்களைச் சந்தித்துவிட்டனர். அவர்களைச் சந்தித்த உடனே ஆவலோடு, “நீங்கள் தடுத்து நிறுத்தியிருக்கும் கப்பலில் வந்திருப்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? இந்த ஒரு கப்பலைத் தவிர வேறு ஏதாவது கப்பல் வந்ததா? இந்தச் சில் நாட்களில் யாராவது ஓர் இளம் பெண் கப்பலில் வந்து இறங்கித் தனியாக இந்தக் காட்டு வழியில் புறப்பட்டதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று எத்தனை சந்தேகங்கள் தன் மனத்தில் இருந்தனவோ அத்தனைக்கும் சேர்த்துக் கேள்விகளைக் கேட்டார்

சக்கசேனாபதி. -