பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

627


அவர்களுடைய குதிரைகளுக்குப் பக்கத்திலேயே அடக்கமாகக் கடற்படை வீரர்களும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். -

“பிடிபட்ட கப்பலிலிருந்து யாரோ ஒர் இளம் பிள்ளை மட்டும் தப்பி விட்டதாகக் கூறுகிறீர்களே! நீங்கள் ஏன் அவ்வளவு கவனக் குறைவாக நடந்து கொண்டீர்கள்? உங்களுக்குத் தெரியாமல் அவன் எப்படித் தப்பினான்?” என்று அந்த வீரர்களிடம் கடுமையான குரலில் கேட்டார் சக்கசேனாபதி.

“அதை எங்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை. கப்பல் பிடிபட்ட அன்று நடுப்பகலில் அந்த இளைஞன் கீழ்த்தளத்திலுள்ள அறைக்குப் போனான். அதன் பின் அவனை நாங்கள் காணவேயில்லை. முன்குடுமிக்காரரிடமும் அந்தப் பெண்ணிடமும் விசாரித்ததில் அந்த இளைஞன். கப்பலிலிருந்து தப்பிச் சென்று விட்டான் என்றும், எப்படித் தப்பினான், எங்கே போனான் என்பது தங்களுக்குத் தெரியாதென்றும் அவர்கள் கூறிவிட்டார்கள். நாங்களும் முடிந்த வரையில் தேடிப் பார்த்தோம். அந்த இளைஞன் அகப்படவில்லை” என்று கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் கூறினர்.

“முன் குடுமிக்காரரும், அந்தப் பெண்ணுமே, அவனை உங்களுக்குத் தெரியாமல் தப்பச் செய்துவிட்டு உங்களிடம் ஒன்றும் தெரியாதது போல் நடித்திருக்கிறார்களென்று எனக்குத் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் உங்கள் பாதுபாப்புக் குறைவுதான் காரணம்.” -

“அப்படியிருப்பதற்கில்லை, மகாசேனாபதி! ஏனென்றால் முன் குடுமிக்காரரும் அந்தப் பெண்ணும் தப்பிச் சென்ற இளைஞன்மேல் கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்த இளைஞனைப் பற்றித் தங்களுக்குள் வெறுப்பாகவும், கேவலமாகவும் பேசிக் கொள்கிறார்கள். அவன் அவர்களுக்கு வேண்டியவனாக இருக்கமுடியாது.”

“இவர்கள் சொல்வதைக் கேட்டால் எல்லாம் ஒரே புதிராக அல்லவா இருக்கிறது?” என்றான் அதுவரையில் குறுக்கிட்டுப் பேசாமல் அமைதியாகக் குதிரையைச் செலுத்தி வந்த குமாரபாண்டியன். - -