பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


அவன் கூறியது மெய்தான்! வடதிசைப் படைகளைத் தடுத்துப் போர் செய்வதற்காக நெல்வேலிக்கும் கரவந்தபுரத்துக்கும் இடையே எதிர்கொண்ட பாண்டியப் பெரும் படையில் தளபதி வல்லாளதேவன் தென்படவில்லை. கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தனும், சேர நாட்டிலிருந்து வந்த படையை நடத்திக் கொணர்ந்த படைத் தலைவன் ஒருவனும்தான் போர்களத்தில் பொறுப் பானவர்களாக முன்னால் நின்றார்கள். சேர நாட்டுப் படை பொதியமலை வழியாகக் கரவந்தபுரத்தில் வந்து பெரும்பெயர் சாத்தனின் படையோடு சேர்ந்து கொண்டிருந்தது.

இரண்டு படைகளும் சந்தித்த இடத்தில் தாமதமின்றிப் போர் தொடங்கிவிட்டது. தளபதி வல்லாளதேவன் களத்தில் தென்படாததனால் அவன் எந்தக் கணத்திலும் வேறொரு திசையிலிருந்து படைகளுடன் வந்து தங்களைத் திடீர்த் தாக்குதலுக்கு ஆளாக்கலாமோ என்று வடதிசை மன்னர்களுக்கு உள்ளுற பயம் இருந்தது. எந்த விதத்தில் எத்திசையிலிருந்து திடீர்த் தாக்குதல் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் தக்கபடி தங்கள் பெரும் படையைப் பிரித்து வகுத்துக் கொண்டு போரைச் செய்தனர் வடதிசை மன்னர்கள்.

அதே நிலையில் அதே இடத்தில் சில நாட்கள் போர் நீடித்தது. முதலில் இரு பக்கத்திலும் வெற்றி தோல்விகள் அதிகமின்றி மந்தமாக இருந்த போர் மூன்றாம் நாள் காலையில் நிலை மாறிவிட்டது. முதல் இரண்டு நாட்களிலும் தாக்குதலை நன்றாகச் சமாளித்த கரவந்தபுரத்துப் படை சற்றே தளர்ந்தது. சேரர் படை உடனிருந்தும் பயனின்றிப் பின்வாங்குகிற நிலைமை ஏற்படும் போலிருந்தது. பெரும்பெயர்சாத்தன் நிலைமையின் நெருக்கடியை உடனே மகாமண்டலேசுவரருக்குச் சொல்லியனுப்பினான். பாவம்! மகாமண்டலேசுவரருக்கு உண்டாகியிருந்த வேறு நெருக்கடிகளைப் பற்றி அவனுக்குத் தெரியாதல்லவா? போர்க்களத்திலிருந்து பெரும்பெயர்சாத்தன் அனுப்பிய அவசரத் துரதன் போய்ச் சேருவதற்கு முன் மகாமண்டலேசுவரரும், மற்றவர்களும் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதை முன்னாற் சென்று காணலாம்.