பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


அருகேயிருந்த ஒரு பாறைக்குச் சமீபத்தில் போய் மகாமண்டலேசுவரரும் குமாரபாண்டியனும் நின்றனர். மகாமண்டலேசுவரர் இருளில் அவன் காதருகே ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்திச் சொன்னார்: “இராசசிம்மா! சற்று முன் நீ எல்லோரிடமும் சொல்லி விடுவதற்கு இருந்த சோகச் செய்தி என்னவென்று நான் இப்போதுதான் சேந்தனிடம் அறிந்து கொண்டேன். பகவதி இறந்து,போனாள் என்ற செய்தியை இன்னும் சிறிது காலத்துக்கு வெளியிடாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லது. நான் வெளியிடச் சொல்கிறவரை அதை வெளியிடுவதில்லை என்று எனக்கு வாக்குத் தத்தம் செய்துகொடு” .

இதைச் சொல்லிவிட்டு, வாக்குறுதிக்காக வலது கையை நீட்டினார் அவர். “சுவாமி! என்னைச் சோதிக்காதீர்கள். நீங்கள் மிகப் பெரியவர். எவ்வளவு பெரிய துக்கத்தையும் அங்கீகரித்துக் கொண்டு உணர்ச்சி வசப்படாமல் நிமிர்ந்து நிற்கிற தெம்பு உங்களுக்கு உண்டு. நான் அப்படி மறைத்துக் கொண்டு நிற்கும் உறுதியற்றவன். என்னை மன்னித்துவிடுங்கள். அந்தப் பெண்ணின் துர்மரணத்தை என்னால் ஒளிக்க முடியாது. உங்கள் பெண்ணும் சேந்தனும் கூட அந்தத் துயர உண்மையை மறைத்துக்கொண்டு இருந்துவிடுவார்கள். என்னால் முடியாதே!” என்று நாத் தழுதழுக்கச் சொன்னான் குமாரபாண்டியன்.

“நீ கட்டாயம் அதை மறைத்துத்தான் ஆக வேண்டும். இப்போது நடந்து கொண்டிருக்கும் போரில் தென்பாண்டி நாடு வெற்றி பெற வேண்டுமென்றால், இந்த வாக்கை நீ எனக்குச் சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் உன் விருப்பம்போல் செய். இதற்குமேல் உன்னைக் கெஞ்சிக் கொண்டிருக்க எனக்குத் தெரியாது."-ஒரு கணம் குமார பாண்டியன் என்ன பதில் கூறுவதென்று தயங்கினான். அடுத்த விநாடி, “உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்” என்று அவருடைய வலது கையில் தன் வலது கையை வைத்துச் சத்தியம் செய்துகொடுத்தான். மகாமண்டலேசுவரர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.