பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

691


பார்த்து ஆறுதல் கூறினான் குமாரபாண்டியன். தன் தரப்புப் படைகளின் அணித் தலைவர்கள் எல்லோரையும் கலந்து சிந்தித்தபின் எதிர்த் தரப்புப் படைகளின் வலுவை முறியடிப்பதற்கு ஏற்றவிதத்தில் இரண்டு விதமாகப் படை வியூகத்தைப் பிரித்தான். கரவந்தபுரத்து வீரர்களும் சேர நாட்டு வீரர்களும் அடங்கிய கூட்டத்துக்குப் பெரும்பெயர்ச்சாத்தன் தலைவனானான். தென்பாண்டிப் படை வீரர்கள் அடங்கிய ஐந்நூறு பத்திச் சேனைக்கும் குமாரபாண்டியன் தானே தலைமை தாங்குவதென்று ஏற்பாடு செய்துகொண்டான். சக்கசேனாபதியும் ஈழ நாட்டுப் படைகளும் வந்தால், அப்படியே மூன்றாவது படைவியூகமாக அமைத்துக் கொள்ளலாம் என்பது அவன் தீர்மானமாயிருந்தது. எதிர்த் தரப்புப் படைகளோ ஐந்து வியூகங்களாக ஐம்பெரும் தலைமையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று குமாரபாண்டியன் பெரும்பெயர்ச்சாத்தனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தான். ஐந்து வியூகப் படைக்கும் மூன்று வியூகப் படைக்கும் ஏற்றத்தாழ்வு அதிகம்தான். ஆனாலும் போர்த் திறனும், சூழ்ச்சி வன்மையும் இருந்தால் மூன்று வியூகப் படை வீரர்களால் ஐந்து வியூகப் படை வீரர்களை ஏன் வெல்லமுடியாது? முடியும் என்றே நம்பினான் குமாரபாண்டியன்.

பயணம் வந்த அலுப்பையும் பொருட்படுத்தாமல் அன்றைக்குப் போரிலேயே தானும் களத்தில் தோன்றுவதென்று உறுதி செய்து கொண்டான் அவன். பாசறையிலேயே நாட்கடன்களை முடித்துக் கொண்டு போர்க்கோலம் பூண்டான். மார்பில் கவசங்களை அணிந்தபோது பழைய போர்களின் நினைவுகளும், வெற்றி அநுபவங்களும் மனக்கண் முன் தோன்றின.

குமரித் தெய்வத்தையும், தன் அன்னையையும் நினைத்து கண் இமைகளை மூடித் தியானத்தோடு கைகூப்பி வணங்கினான். பட்டு உறை போர்த்த வட்டத் தட்டில் வைத்துப் பெரும்பெயர்ச்சாத்தன் மரியாதையோடும் பணிவோடும் அளித்த வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டபோதே குமாரபாண்டியனின் கரங்கள் போர்த் துடிப்பை அடைந்து