பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

705


“பெண்னே! இன்னும் எங்கள் பொறுமையைச் சோதித்துக்கொண்டு நிற்காதே! சொல்” என்று மகாராணியும் தூண்டவே புவனமோகினி வாய் திறந்தாள்.

“அதை நான் எப்படிச் சொல்வேன், தேவி! சொல்வதற்கே நாக் கூசுகிறது எனக்கு. கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப் போகிற பாதையில் மகாமண்டலேசுவரருக்கு எதிராகக் கலவரங்களும் குழப்பங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பெரியவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் பற்றி மிகக் கேவலமான முறையில் பேசிக்கொள்கிறார்கள். குழல்வாய்மொழியும் நாராயணன் சேந்தனும் ஈழத்துக்குப் பயணம் செய்த கப்பலில் பகவதியும் சென்றாளாம்; மகாமண்டலேசுவரர் தம்முடைய சூழ்ச்சியால் அந்தப் பெண் பகவதியை ஈழ நாட்டிலிருந்து திரும்ப முடியாதபடி அங்கேயே இறக்கும்படி செய்துவிட்டாராம் தளபதி வல்லாளதேவனைப் போர்க்களத்துக்குப் போகக்கூடாதென்று தடுத்துச் சிறைப்படுத்தினாராம். மகாமண்டலேசுவரருடைய காவலிலிருந்து தப்பித் தளபதியும் ஆபத்துதவிகள் தலைவனும் கழற்கால் மாறனார் முதலியவர்களோடு சேர்ந்து கொண்டு ஒரு பெரிய கலகக் கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் முரட்டுக் கொள்ளைக் கூட்டத்தைப்போல் ஆயுதபாணிகளாகத் திரிந்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள். நான் தப்பி ஓடிவரத் தெய்வம்தான் துணை புரிந்தது. போகிற வழியில் இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டேன். ஆனால் இவை எவ்வளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் பலர் கூறக்கேட்ட போது நம்பாமலும் இருக்க முடியவில்லை. இந்த நிலையில் கலக்கமுற்றுப் பதறி ஓடி வந்தபோது கலகக்காரர்களிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் உயிர் பிழைத்து வரவேண்டுமே என்ற பயம் இங்கு வந்து சேர்கிறவரை என்னை விடவில்லை. ஒருவழியாக அரண்மனைக்கும் வந்து உங்களிடமே நடந்ததைக் கூறிவிட்டேன். பேசி முடிப்பதற்குள் புவனமோகினிக்கு மூச்சு இரைத்தது. அச்சத்தினாலும் குழப்பமான மன நிலையினாலும்

பா.தே.45 -