பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


எடுத்தபின் அன்று அந்த மனிதருடைய முகத்தில் அவ்வளவு அமைதி எவ்வாறு வந்து பொருந்தியதென்று வியந்தான் சேந்தன், அந்த ஒரே நாளில், ஒரு சில நாழிகைகளில் அவர் திரங்கி இளைத்துத் தளர்ந்துவிட்டது போல் அவருடைய தோற்றம் காட்சியளித்தது. உள்ளே எரிந்துகொண்டிருந்த சிவன் கோவில் விளக்கின் மங்கலான ஒளியில் தூணில் சாய்ந்திருக்கும் அந்த அறிவு மலையை இமையாமல் பார்த்தான் அவருடைய அந்தரங்க ஊழியன். அவர் உணவே உட்கொள்ளவில்லை என்ற நினைவு அவனுக்கு ஏற்பட்டதும் பரபரப்போடு எழுந்து அருகிற் சென்று, “சுவாமி!” என்று மெல்லக் கூப்பிட்டான். அவர் கண் விழித்து, “என்ன வேண்டும். சேந்தா?” என்று புன்னகையோடு கேட்டார்.

“தாங்கள் சாப்பிட வேண்டும்.” “சேந்தா! நம்முடைய வள்ளுவர் பெருமான் இந்தச் சமயத்தில் நான் நினைத்துப் பார்ப்பதற்கென்றே ஒர் அழகான குறளை எழுதிவிட்டுப் போயிருக்கிறார்.” “என்ன குறள் சுவாமி, அது?” “'மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து என்பதுதான் அப்பா அந்தக் குறள். இனிமேல் நான் சாப்பிடுகிற சாப்பாடு அடுத்த பிறவியில் இருக்கும். என்னைத் தொந்தரவு செய்யாதே! நீ போய்ப் பேசாமல் தூங்கு”

சேந்தன் இதைக் கேட்டுப் பொறுக்கமுடியாமல் அழுதுவிட்டான். - -

“அழாதே! நீ ஏன் அழுகிறாய்? ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு நடுவே தன் தாய்ப் பசுவை இனம் கண்டு அடையும் கன்றுக் குட்டிபோல் வினைப் பயன் யாரையும் தவறவிடாது. மேலே வீசி எறியப்பட்ட பொருள் கீழே வீழ்ந்துதான் ஆக வேண்டும். இதுவரையில் நல்வினைகள் என்னை மேலே வீசி எறிந்திருந்தன. நான் உயர்ந்த நிலையில் இருந்தேன். இப்போது அவை கைவிட்டுவிட்டன. அதனால் நான் வீழ்ந்துவிட்டேன்.” “சுவாமி! இப்படியெல்லாம் பேசாதீர்கள், நீங்கள் பேசப் பேச எனக்கு அழுகை குமுறிக்கொண்டு வருகிறது.” -