பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


அறைவாயிலில் அந்தச் சமயத்தில் ஒரு காவலன் அவசரமாக வந்து வணங்கி நின்றான். “தேவி! குமாரபாண்டியர் அவசரமாகப் போர்க்களத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார். தங்களைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறார்” என்று அந்தக் காவலன் கூறியதும் விலாசினியும், புவனமோகினியும் விறுட்டென எழுந்து அந்த இடத்திலிருந்து ஒதுங்கிச் சென்றனர். மகாராணியின் நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. கண்கள் அறைவாயிலை நோக்கிப் பதிந்து நிலைத்தன.

வாட்டமடைந்த தோற்றத்தோடு பயணம் செய்து களைத்துக் கறுத்த முகத்தில் கவலையும் பரபரப்பும் வேகமாக தென்பட அறைக்குள் நுழைந்தான் குமாரபாண்டியன். அவனைக் கண்டதும் துயரம் பொங்க, குழந்தாய்! இந்த நாட்டின் அறிவுச் செல்வரைப் பறிகொடுத்து விட்டோமே!” என்று கதறினார் மகாராணி.

‘அம்மா ! என்ன நடந்துவிட்டது? நிதானமாகச் சொல்லுங்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் குழப்பங்களையும், கவலைகளையும் சுமந்துகொண்டு போர்க்களத்திலிருந்து இங்கே ஒடி வந்திருக்கிறேன். நீங்கள் எதையோ சொல்லிக் கதறுகிறீர்களே?” என்று அருகில் வந்து அமர்ந்து வினவினான் இராசசிம்மன்.

“சொல்லிக் கதறுவதற்கு இனி என்ன இருக்கிறது? இலங்கையில் உன்னைத் தேடிவந்த இடத்தில் பகவதி இறந்து போனாள் என்ற உண்மையை இங்கு வந்ததுமே நீ என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதா? எல்லோருமாகச் சேர்ந்து அதை மறைத்தீர்கள். தளபதியைப் போர்க்களத்துக்கு வர விடாமல் செய்தீர்கள். அவற்றால் எத்தனை பெரிய உள்நாட்டுக் கல்கம் எழுந்துவிட்டது. மகாமண்டலேசுவரர் மாண்டு போனார். இடையாற்றுமங்கலம் தீயுண்டு அழிந்து விட்டது. இன்னும் என்ன நடக்கவேண்டும் அப்பா? எல்லாவற்றையும் கேட்டுவிட்ட பின்பும் துக்கத்தையும் உயிரையும் தாங்கிக்கொண்டு சாக மாட்டாமல், உட்கார்ந்திருக்கிறேன் நான்” என்று தன் தாயின் வாயிலிருந்து மகாமண்டலேசுவரரின் மரணச்செய்தியைக் கேட்டபோது அப்படியே திக்பிரமை பிடித்துப்போய் அயர்ந்து கிடந்தான் இராசசிம்மன். பயமும் திகைப்பும் உண்டாக்கும்