பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

75


மெதுவாகச் சிரித்துக்கொண்டு வெளியே நிற்பவனை அவனுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்.

“யார், நாராயணன் சேந்தன்தானே ? வா, அப்பா ! கதவைத் திறந்து கொண்டு உள்ளே வா! உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்” என்று அவர் கூறிய போது தளபதி அடைந்த வியப்புக்கு அளவே இல்லை.

மணிகள் ஒலிக்குமாறு கதவைத் திறந்துகொண்டு நாராயணன் சேந்தன் உள்ளே பிரவேசித்தான். அவன் அணிந்திருந்த ஆடைகள் நனைந்திருந்தன. உடம்பில் சேறும், சகதியுமாக இருந்தது. தலை முடியில் இரண்டொரு பழுப்படைந்த மகிழ இலைகளும் பூக்களும் செருகிக் கொண்டு கிடந்தன.

இந்தக் கோலத்தோடு உள்ளே வந்து நின்ற அவனை ஏற இறங்கப் பார்த்தார் இடையாற்றுமங்கலம் நம்பி. “இது என்னப்பா தோற்றம்? உன்னுடைய அழகான கேசத்துக்கு மகிழம்பூச் சூட்டிக் கொள்ளவில்லை என்றால் அடிக்கிறதோ?” என்று அவர் கேட்டபோது அவனுக்கே ஆச்சரியமாகி விட்டது.

“என்னது! மகிழம் பூவா? என் தலையிலா?” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அவன் தலையைத் தடவி உதறினான். இலைகளும் பூக்களும் கீழே உதிர்ந்தன.

“சேந்தா! நீ சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்தில் என்னைச் சந்தித்துக் கூறியதெல்லாம் உண்மைதானே? இதோ உட்கார்ந்திருக்கும் தளபதி ஒரே ஒர் உண்மையை மட்டும் ஏனோ மறைப்பதற்கு முயற்சி செய்கிறார். அந்த மூன்று ஒற்றர்களிடம் ஏதோ ஒர் ஒலை இருந்ததென்றும், அந்த ஒலையைத் தளபதி அவர்களோடு போரிட்டுக் கைப்பற்றி வைத்துக் கொண்டிருப்பதாகவும் நீ கூறினாய். இவர் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்; ஆனால் அதை மட்டும் சொல்லவில்லை. நானாகவே இப்போதுதான் வலுவில் அவரிடம் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். நல்ல சமயத்தில் நீயும் வந்திருக்கிறாய்!”