பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“சுவாமீ! என் கண்களால் கண்ட உண்மையைத் தான் அடியேன் சுசீந்திரத்தில் தங்களிடம் தெரிவித்தேன். புலி இலச்சினையும், பனை இலச்சினையும் ஆகிய அரசாங்க முத்திரைகள் அந்த ஒலையில் அடுத்தடுத்து வரிசையாகப் பொறிக்கப்பட்டிருந்தன. என் கையாலேயே அதை எடுத்துப் பார்க்கும் வாய்ப்புக் கூட எனக்குக் கிட்டியது. துரதிருஷ்டவசமாக என்னால் அதைப் படித்துப் பார்க்க முடியாமல் சந்தர்ப்பம் கெடுத்துவிட்டது. ஆனால் கடற்கரைப் பாறைகளுக்கு நடுவே தளபதி எதிரிகளோடு வாட் போர் செய்ததையும் ஒலையை வைத்துக் கொண்டிருந்தவன் அதைக் கடலில் எறிவதற்குப் போன போது அவன் கையை மறித்து அவர் அதைப் பறித்துக் கொண்டதையும் என் கண்களால் கண்டேன்.”

“நீ இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய். இவர் அதைப் பற்றி வாய் திறக்கவே பயப்படுகிறாரே !” என்று புன்னகையோடு அருகில் அமர்ந்திருந்த வல்லாள தேவனைச் சுட்டிக் காட்டினார். மகாமண்டலேசுவரர்.

“ஒரு வேளை அந்த ஒலையில் அடங்கியிருக்கும் செய்தி இவரை இப்படி மெளனம் சாதிக்கச் செய்கிறதோ, என்னவோ?’ என்றான் நாராயணன் சேந்தன். தளபதி வல்லாளதேவன் திக்பிரமையடைந்துபோய் பேசாமல் உட்கார்ந்திருந்தான். அவன் மனத்தில் கீழ்க்கண்ட எண்ணங்கள் ஓடின.

“ஆகா! இந்த இடையாற்று மங்கலம் நம்பி யாருக்கும் தெரியாமல் எவ்வளவு அந்தரங்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் ! நாட்டில் நடப்பதையெல்லாம் ஒன்று விடாமல் அறிந்து கொண்டு வந்து கூற இவரைப்போலவே இவருக்கு ஒரு தந்திரசாலியான ஒற்றன்! இவருக்குத் தெரியாது என்றோ, தெரியவிடக்கூடாது என்றோ எதையும் எவராலும் மறைத்துவைக்க முடியாது போலிருக்கிறதே! எவ்வளவு முன் யோசனை! எவ்வளவு சாமர்த்தியம்’ என்று அவரைப் பற்றிய வியப்பான நினைவுகளில் ஆழ்ந்து போய் உட்கார்ந்திருந்தான்!