பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பாண்டிமாதேவி / முதல் பாகம்


செய்தால் இந்த நாடு எங்கே உருப்படப்போகிறது ? என்றெல்லாம் உன் மனத்தில் தோன்றியது உண்டா, இல்லையா?” என்று கேட்டுவிட்டு நகைத்தார் அவர்.

தளபதி வல்லாளதேவன் திடுக்கிட்டுப் போனான். இந்த மனிதர் என்ன மந்திரவாதியா இவருக்கு ஏதாவது குறளிவித்தை தெரியுமா ? என்னுடைய மனத்தில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை அப்படியே கண்டுபிடித்துச் சொல்லி விட்டாரே! என்று வியந்தான் அவன்.

“என்ன தளபதி ! உண்மைதானா?”

தன் நினைவில்லாமலே அவருடைய கேள்விக்கு ‘ஆம்’ என்று பதில் சொல்வதுபோல அவன் தலை அசைந்தது.

“நீ இப்படி நினைத்ததை நான் ஒரு பிழையாகக் கருதவில்லை. சந்தர்ப்பத்தின் கோளாறு உன்னை இப்படி தினைக்கச் செய்திருக்கிறது. ஆனால் வல்லாளதேவா ! இந்த ஒலையையும் இது கிடைத்த நிகழ்ச்சியையும் தொடர்ந்து எண்ணி மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே. இப்போதே மறந்து விடு!” இதுவரையில் அமைதியாகத் தலை குனிந்து அவர் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தளபதி தலை நிமிர்ந்து ஒரு கேள்வி கேட்டார்.

“மகாமண்டலேசுவரர் சொல்வதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மகாராணி வானவன் மாதேவியாரைக் கொலை செய்வதற்காகப் பயங்கரமான சதி முயற்சிகள் என் கண்காணவே நடக்கும்போது கடமையும் பொறுப்புமுள்ள நான் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அது நீதியல்லவே?”

“தளபதி ! உன்னுடைய பதவிக்கு இந்தப் பொறுப்பு உணர்ச்சி அவசியமானதுதான். ஆனால் மகாராணியாரைக் கொலை செய்வதும், புறத்தாய நாட்டைக் கைப்பற்ற முயல்வதும் யாராலும் எளிதில் முடியாத காரியங்கள். அப்படியே முடிவதாக இருந்தாலும் அதனை நீயும் உன்னைச் சேர்ந்த படைவீரர்களும் மட்டும் தடுத்துவிட முடியுமென்று எண்ணுவது பேதைமை ! உன்னைக்