பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
பாண்டியன் நெடுஞ்செழியன்


திருமணம் நிகழ்ந்த பின்னரும் பல மாதங்கள் அதைப்பற்றியே யாவரும் பேசிக்கொண்டிருந்தனர். அரசன் காதலின்பத்தை நுகரத் தொடங்கினான். ஆயினும் அவனுக்கு வெற்றி மகளிடம் இருந்த ஆராக் காதல் தணியவில்லை. மீண்டும் மீண்டும், யார் எங்கே குறும்பு செய்கிறார்கள் என்று ஆராய்ந்தான். யாரேனும் முணுக்கென்றால் ஓடினான்; பகைவரை எதிர்த்துப் போரிட்டு வெற்றியோடு திரும்பினான்.

பாண்டி நாட்டின் தெற்கே கடற்கரையை அடுத்த பகுதியில் பரதவர் என்னும் வகுப்பினர் இருந்து வாழ்ந்தனர். கடல் வாணிகம் செய்தும் முத்தும் பவளமும் எடுத்தும் அவர்கள் தம் திறமையைக் காட்டினர். தாம் செய்யும் தொழில்களிலே வரும் ஊதியத்தில் ஒரு பகுதியை அரசனுக்குத் திறையாகச் செலுத்தினர். இது வழி வழியே நடந்துவந்த முறை.

“அரசன் போர் புரிவதிலே பேரூக்கமுடையவனாக இருக்கிறான்; நாடாட்சியைத் தக்கவண்ணம் கவனிப்பதில்லை” என்ற பேச்சை அங்கங்கே சிலர் பேசத் தலைப்பட்டார்கள். அதனைக் கேள்வியுற்ற பரதவர், ‘அப்படியானால் நாம் திறை அளிக்காமல் நிறுத்தி விடலாமே. அதை அவன் எங்கே ஆராயப்போகிறான்?’ என்ற எண்ணம் கொண்டனர். ஒருகால் போர் நிகழ்ந்தாலும் தம்மினத்தார் யாவரும் கூடி எதிர்த்துத் திறை வழங்கும் வழக்கத்தை மாற்றிவிடலாம் என்பது அவர்கள் நினைவு.

பரதவர் இறை இறுக்கவில்லையென்பதை அதிகாரிகள் அரசனுக்கு அறிவித்தனர். உடனே இறையை இறுக்க வேண்டும் என்று அரசன் ஓலை போக்கினான்.