பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் படிமங்கள் V 37 பிறபுலன்களின் மூலம் பெறும் தூண்டல்களால் மனம் அந்தந்தப் பொருள்கள் தரும் சுவைகளைப் பெற்று அவற்றில் ஈடுபடுகின்றது. இவ்வாறு வெளியுலகத் தூண்டல்களால் அடிக்கடி மனம் பெறும் அநுபவம் பெருமூளையில் பதிவாகிவிடுகின்றது. உலகை இன்பமயமாகக் கண்டு உள்ளத்தில் பூரிப்பு அடையவர்கள் கவிஞர்கள். இவ்வாறு பெருமூளையில் பதிவாகி இருக்கும் அநுபவம் அச்சு வடிவிலுள்ள கவிதைகளைப் படிக்கும்போது நினைவாற்றலின் காரணமாகத் தூண்டல்களாக (Ideational level), மேற்பூத்தண்டு (Hypothalamus) என்ற பகுதிகளின் மூலமாகப் புலன்களை அடையும்போது மூளையில் அற்புதமாக அமைந்திருக்கும் நரம்பு அமைப்புகளைத் தூண்ட, அந்நரம்புகளின் இயக்கத்தால் மாங்காய்ச் சுரப்பிகள் (Adrenal glands) போன்ற நாளமிலாச் சுரப்பிகளில் (Ductiess glands) சாறுகளைச் சுரக்கச்செய்து குருதியோட்டத்தை மிகுவிக்கின்றன. உடலும் கிளர்ச்சி அடைகின்றது. அப்போது கவிதைகளில் வரும் படிமங்களைப் புலன்கள் மீண்டும் மனத்தில் தோன்றச் செய்கின்றன. மனம் அக்காட்சிகளை அநுபவித்து மகிழ்கின்றது. இத்தகைய முருகுணர்ச்சி பாவேந்தருடைய பாடல்களைப் பயிலுங்கால் ஏற்படுகின்றது; இந்த உணர்ச்சியை நாம் பயிற்சியால் பெறுகின்றோம். “பாண்டியன் பரிசிலுள்ள பாடல்கள் கவிஞருடைய அநுபவத்தையே நம்மிடம் எழுப்புகின்றன; நாம் அதனை மானசீகமாகக் கண்டு மகிழ்கின்றோம். பாடல்கள் "மம்மர் அறுக்கும் மருந்தாக” நமக்குக் களிப்பூட்டுவதையும் காண்கின்றோம்.