பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி
25
சிறப்புக்கள் செய்தனன். போர்க்களத்திலும் அவன் பெருமையைக்கண்டுணர்ந்த நெடும்பல்லியத்தனார் அவன் போர்ச் சிறப்பைப் புகழ்ந்தனர். நெட்டிமையார் அவன் யாகம் செய்த பெருமையைப் புகழ்ந்து மேலே காட்டிய பெரும்பாடலை இயற்றியது மற்றப் புலவரையும் அவனை மேலும் மேலும் புகழத் தூண்டியது. தானம் பெற்ற அந்தணர் எல்லாம் மனமுற வாழ்த்திச் சென்றனர். தேவரும் ஆவுதியால் மகிழ்ந்து புஷ்ப வருஷம் பொழிந்தது போல நாடெங்கும் மழை பொழிவித்தனர்.
பாண்டிய நாடெங்கும் தெய்வ மணம் கமழ்ந்தது. அரசருள் எல்லா வகை நற்குணங்களும் வாய்க்கப் பெற்ற அரசரைப் பெறுவது ஒரு நாட்டினர்க்கு முன்னைப் புண்ணியப் பயனன்றோ? அப்பயனைப் பெற்ற பாண்டிய நாட்டார் அடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை யுண்டோ? பஃறுளியாறு பாய்ந்த தென்கோடளவும் தன் நாட்டெல்லையைப் பரப்பிய பாண்டியன் பல் யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி புரவலர் பணியவும் புலவர் புகழவும் தமிழெனும் மடந்தை தலை சிறந்தோங்கவும் நால்வகை வருணத்தாரும் தத்தம் நிலை வழுவாது காத்தலால் அறநிலை யறமும், நிரை மீட்டல் பகைவெல்லல் கடன் கழியாதாரைத் தண்டித்தல் என்ற முறை யால் மற நிலை யறமும், தத்தம் நிலைக்கேற்ப நாட்டவர் பெறும் பொருளை வளர்த்தலால் அற நிலைப்பொருளும், பகைவர் பொருள் திறைப்பொருள் தண்டப்பொருள் சூதர் பொருள் என்ற நால்வகைப் பொருட்பேற்றால் மற நிலைப் பொருளும், குலமும் ஒழுக்கமும் குணமும் பருவமும் ஒத்த பெண்டிரை மணந்து நாட்டவரை