பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

II

சோழ மன்னனும் சேர-வரசனும், பாண்டியன் நன்மாறன் பெரும்படை திரட்டிக்கொண்டு தம்மோடு போர் செய்ய வருவதாய் அறிந்தனர். சோழன் கரிகாற் பெருவளத்தான் குடித்தோன்றல் போருக்குப் பின்னிடைவனோ ? இமயவரம்பன், வானவரம்பன் முதலிய சிறப்புப் பெயர்கள் பூண்ட சேரனும் சிறுமை பெறுவனோ ? இருவரும் தத்தம் படைகளைத் திரட்டினர்; தம்மிருவர்க்கும் பகையாய் வரும் பாண்டியனைத் தாமிருவரும் ஒன்று சேர்ந்தே எதிர்த்துப் போரியற்றத் துணிந்திருந்தனர். இச்செய்தியை ஒற்றர் மூலம் அறிந்த நன்மாறன், “தனித்தனி ஒவ்வோரரசரை வெல்வதைக்காட்டிலும், இருவரையும் ஒரு சேர வெல்வதே நமக்குச் சிறந்த வெற்றியும் புகழுமாம்,” என்று எண்ணினன்.

பாண்டிய சேனை விரைவிலே போர்க்குப் புறப்பட்டது. படைத் தலைமை பூண்ட வீரர் பலரும் தத்தம் அணிகளை முறையே வகுத்துக்கொண்டு முன்னே நடத்திச் சென்றனர். தண்டத் தலைவர் இன்ன இன்ன இடத்தில் இன்ன இன்ன படைஞர் இவ்வண்ணம் நின்று போர்புரிய வேண்டும் என்று ஆணை பிறப்பித்துக் கொண்டு பின்னே சென்றனர். புலவர் சிலர் உடன் வர, நன்மாறனும் போர்க்கோலம் பூண்டு கூழைப்படைக்கும் இடைப்படைக்கும் இடையிலே சென்றுகொண்டிருந்தான். வழியெல்லாம் இருந்த வயல்களிலும் தோட்-