உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பாண்டிய மன்னர்

கெளியனாயும், நின்பகைவர்க்கு வலியனாயும் அரியனாயும் இருக்கின்றாய். நினது புகழை அளந்து பாட வல்லுநர் சிலர் உளரேல், அவர் வாக்களவில் நின் புகழ் அடங்குவதோ? பாட அறியாராயினும், அவர் அன்போடு அமைத்த பாடலின் அளவில் நின் புகழ் அடங்குவதும் உண்டே! நின்னிடம் யாம் கூறுவது ஒன்று உண்டு. நின் படைஞர் பிறர் நாடு கவர்ந்த பெருமையால் மகிழ்ந்திருக்கும் இவ்வமயத்தில் அது கேட்டற்குரிதாம்! பாண்டிய நாட்டு மறவர்கள் அயல் நாடுகளை வென்று அடக்கும்போது, அப்பகைவர் நாடுகளில் உள்ள சாய் கதிர்க் கழனிகளைக் கவர்கின்றனர்; பெரிய ஊர்களிலே தீயிடுகின்றனர். மின்னொளியுடைய நின்னுடைய வேற்படை பகைவரை அழிக்கும். இவ்வாறெல்லாம் நிகழினும் நிகழ்க. ஆயினும் அவ்வந்நாடுகளிற் புறத்துள்ள காவற் காடுகளில் நின்று நிலைத்த கடி மரங்களை வெட்டும் வழக்கத்தை நிறுத்தி விடுமாறு ஆணையிட வேண்டுகிறோம். ஏனெனில், நினது போர்க் களிறுகள் தம்மைக் கட்டி வைத்த கட்டுத் தறிகளுள் அடங்கி நில்லாது அவற்றை முறித்துவிடு மாகையால், அவ்வாறு முறித்துக்கொண்டோடும் களிறுகளைக் கட்டி வைக்க மேற்குறித்த கடி மரங்கள் உதவு மன்றோ?

நக்கீரனார்:-- புலவரேறே, நீவிர் கூறுவதைக் கவனித்தால் நம் நாட்டுப் படைஞர் அயல் நாடுகளிலே நெல் விளை கழனிகளைப் பாழ்படுத்தி ஊர்களிலே தீயிட்டு அழித்துப் பகைவரை வென்று வந்துள்ளார் என்றும், அநேக இடங்களிற் காவற் காடுகளில் உள்ள கடி மரங்களையும் வெட்டியிருக்கிறார்கள் என்றும் அறிய நேரிடுகிறது.