பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பாபு இராஜேந்திர பிரசாத்

அதே போன்றே, முஸ்லீம்கள் விழா என்றாலும், இந்துக்கள் அவரவர் குடும்பத்தினருடன் சென்று கலந்து, மகிழ்ந்து, விருந்துண்டு களித்து, அவரவர் இல்லம் போய், உண்டு பெற்ற உற்சாகத்தை அடிக்கடி நினைத்து உறவு முறை கொள்வார்கள்.

குழந்தை இராஜேந்திரருக்கு ஐந்து வயதானது. இந்துக்களானாலும் சரி, முஸ்லீம்களானாலும் சரி, அப்போதெல்லாம் இந்து - முஸ்லீம் என்ற வகுப்புணர்வு பேதம் இல்லாமல், பெரும்பாலான பள்ளிகளில் முஸ்லீம் மெளலவிகளே, இந்துக் குழந்தைகளுக்கும் அட்சராப்பியாசம் செய்து வைப்பார்கள். எழுத்தறிவித்தவன் இறைவனல்லவா? அதனால், எழுத்துக்களைப் போதிக்கும் மெளலவிகளுக்கு குரு காணிக்கை வழங்கிக் குருகுலம் போல பாடம் கற்றுக் கொள்வார்கள் இந்துக் குழந்தைகள். ஏன் மெளல்வியையே குருவாக ஏற்பார்கள் என்றால் அக்காலத்தில் பிள்ளைகளை நேராகப் பள்ளிகளில் சேர்க்க முடியாது. மெளலவியிடம் ஓரெல்லைவரை கட்டாயம் படித்தாக வேண்டும். ஆனால், படிக்கப் போகும் ஹதுவா சமஸ்தானத்துப் பள்ளிகளில் முதலில் கற்பிக்கும் எழுத்தே பார்சி மொழி எழுத்துக்களாகவே இருந்தன. அதனால், அதற்குரிய ஆசான்கள் மெளல்விகளே என்று கருதி இந்துக்களும் - அவரவர் குழந்தைகளை அப்பள்ளிகளுக்கே அனுப்பி வைப்பார்கள்.

இராஜேந்திர பாபு மட்டும் தனியே பள்ளிக்குச் செல்லவில்லை. அவருடைய பெரியப்பா மகன்களும் அவருடன் கூடிச் சென்று வந்தார்கள். பெரியப்பா மகன்கள் பாபுவுக்குச் சகோதரர்கள் தானே! அதனால், அவர்கள் செய்யும் போக்கிரித்தனத்தையும், குறும்புகளையும், விஷம வேலைகளையும் பாபு பெற்றோரிடம் கூறமாட்டார்; அந்தச் செயல்களில் கலந்து கொள்ளவும் மாட்டார். அவ்வளவு அமைதியாகப் பள்ளிக்குப் போவார், வருவார். ஒரு மெளலவி எழுத்துக்களைக் கற்பித்தவுடன் - வேறோர் மெளலவி