பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

49

உழைப்புக்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அது மட்டுமல்ல, ராஜன் பாபு விவசாயிகளது கஷ்டங்கள் அனைத்தையும் அறிந்தவர். ஆதலால், அவர்களது தேவைகள் என்னென்ன? நீக்கல்கள் என்னென்ன என்பதை ஒரு பட்டியலைப் போட்டுக் காந்தியடிகள் மூலமாகக் கவர்னரிடம் கொடுத்து பரிந்துரைகளை எல்லாம் கவர்னர் நிறைவேற்றிக் கொடுத்ததால், ராஜன் பாபுவுக்கு சம்பரான் பகுதி விவசாயிகள் மத்தியில் செல்வாக்கும் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்து விட்டது.

ஒரு நூறாண்டுக் காலம் விவசாயிகளிடம் இருந்து வந்த ஆறில் ஒரு பங்கு நிலத்தில் அவுரி விவசாயம் பயிரிடும் கட்டாய ‘தீன்கதியா’ முறை ஒழிக்கப்பட்டு விட்டது. அத்துடன், தோட்ட முதலாளிகளின் கெடுபிடிக் கொடுமையும் ஆதிக்க ஆணவமுறையும் அழிக்கப்பட்டது. நசுக்கப்பட்டு நலிந்து கிடந்த விவசாயிகள், ராஜன் பாபுவின் அறிவுப் பிரச்சாரத்தால் அடிமைத்தனத்திலே இருந்து விடுபட்டு சுதந்தர மக்களானார்கள். அதற்குக் காரணம் காந்தி பெருமானின் அறப்போர்தான், சம்பரான் மக்களது சுதந்தரப் போர் உணர்வை தட்டி எழுப்பியது. இதைத்தான் பாபுவிடமும், மற்ற பீகாரிகளிடமும், “உங்களுக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியவில்லையா? அதற்கான பணிகளைத்தான் மக்களிடம் செய்து வருகிறேன்” என்று காந்தியடிகள் முன்பு ஒருமுறை குறிப்பிட்டதின் சொற்சுவையும் - பொருட்சுவையுமாகும் என்பதை அவர்கள் இந்த சம்பவத்திற்குப் பிறகு உணர்ந்து கொண்டார்கள். அதே நேரத்தில், அவுரிக் கறையை யாராலும் அழித்து விடவே முடியாது என்று மக்களிடம் ஆழப்பதிந்திருந்த மூடநம்பிக்கையும் பொய்யாகி விட்டதல்லவா?

இராஜன் பாபுவுக்கு சம்பரான் வெற்றிக்குப் பிறகு, பீகார் மாகாணம் மறுமலர்ச்சி பெற வேண்டும் என்ற அக்கறை மேலும் வலுத்தது. விவசாயிகளிடம் உள்ள அறியாமைகளைப் போக்கி அவர்களை அறிவு ஜீவிகளாக்க அரும்பாடுபட்டார்.