பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

பாப்பா முதல் பாட்டி வரை

முட்டை தானம் ஏன்? : தற்போதைய சூழலில், ஏராளமான பெண்கள், உயர்கல்வி படித்து பணிக்குச் செல்கின்றனர். இவர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை அமைந்து, திருமணம் நடைபெற 30, 32 வயது ஆகிறது. இத்தகையோர் 2, 3 ஆண்டுகள், குழந்தைக்கு முயற்சி செய்வதில், 35 வயது தாண்டி விடுகிறது. இந்த வயதில், பெண்களுக்கு உருவாகும் சினை முட்டைகளுக்கு வலிமை குறைவதால், கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைகிறது. 38-40 வயதில் கருத்தரிப்போருக்குக் கருக் கலைப்பு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது.

வயதான பின்னரும், சில பெண்கள் பருவம் எய்தாமல் இருப்பர். இவர்களுக்குக் கர்ப்பப் பை இருக்கும். ஆனால், முட்டைப் (Ovary) இருக்காது. முட்டைப் பை இருக்க வேண்டிய இடத்தில், ரேகை போன்ற கோடு இருக்கும். இவர்களுக்கு முட்டை வளர்ச்சி இருக்காது.

இவர்களுக்கு ஹார்மோன் கொடுத்து, கருப்பையை வளர்த்து, பிற பெண்களின் முட்டையை வாங்கி, சோதனைக் குழாய் குழந்தையை உண்டாக்க முடியும்.

முட்டை தானம் யாருக்கெல்லாம் உதவும் : மாதவிடாய் நின்ற வயதான பெண்கள், 40 வயதுக்கு மேற்பட்ட மாதவிடாய் நிற்காத பெண்கள், கட்டிகள், அறுவை சிகிச்சை காரணமாக முட்டைப் பைசிதிலமடைந்தவர்கள், முட்டைப் பை, மற்றும் கருப்பை வளர்ச்சி குன்றி, சிறுவயதிலேயே மாதவிடாய்நின்ற பெண்கள், மரபணுக் குறை பாடுள்ளவர்கள், சோதனைக் குழாய் குழந்தை சிகிச்சை முறைக்கு முட்டைப்பையை ஊக்குவித்தும், முட்டைகள் வராதவர்கள், பிறவி முதலே முட்டைப் பை இல்லாதவர்கள், “கரு முட்டை தானம்” மூலம் கருவுறும் வாய்ப்புள்ளது.