பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

7

குளிப்பாட்டிய பின்னும், அப்பொருள் தங்கியிருக்குமாயின், சிறிது நல்லெண்ணெய் தடவித் துணியால் மெதுவாகத் துடைத்து நீக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் பார்த்தால் அதன் இரைப்பை வயிற்றுள் சாய்வாக இருக்கும். அதனால் எளிதில் வாந்தி ஏற்படக்கூடும். குழந்தையின் வாயில் உமிழ் நீர் ஊறுவதில்லை. அதனால், குழந்தையால் ஸ்டார்ச்சைச் செரித்துக்கொள்ள முடியாது. பற்கள் முளைக்கும் போதே உமிழ்நீர் சுரக்கத் தொடங்கும்.

குழந்தையின் நுரையீரல், சிறிது சிறிதாக விரிந்து, 6 வயதிலேயே முழு விரிவு பெறுகின்றது. குழந்தையின் மூளை 6 வயதுவரை விரைவாகப் பருக்கின்றது. உச்சப் பருமன் வளர்ச்சி அடைவது முதல் ஆண்டிலாகும். ஆறாவது ஆண்டுக்குப் பின் மெதுவாகவே பருத்து வரும். குழந்தையின் மூளையில் மடிப்புக்கள் (Convolutions) நாளடைவிலேயே உண்டாகின்றன.

பிறந்தவுடன், அது சீரணம், கழிவு, இரத்த ஓட்டம், மூச்சு ஆகிய தொழில்கள் நடப்பதற்கு ஏற்றவண்ணமிருந்த போதிலும், அதன் ஐம்பொறிகள் உடனேயே தொழிற்படக் கூடியனவாக இருப்பதில்லை. சில காலம் சென்ற பின்னரே, அது பார்கவும், கேட்கவும், முகரவும், சுவைக்கவும் கூடியதாக ஆகும்.

குழந்தைக்கு முதலில் கருமை, வெண்மை தவிர வேறு நிறவேறுபாடு தெரியாது; இரண்டு மூன்று மாதம் கழித்தே தெரியும். அது பிறந்ததும், அழவும், கொட்டாவி விடவும் வல்லது. ஆனால் பசிக்கிறது என்றும், உறக்கம் வருகிறது என்றும் தெரிந்து கொள்ளாது. அதன் பசியும், உறக்கமும், வெறும் மறிவினைகளாலேயே நடைபெறுகின்றன.

குழந்தை பிறந்தவுடன் அதன் வெப்பநிலை முதிர்ந்தவருடைய வெப்ப நிலையாகிய 98.6 பா.. ஆக இராது. ஒருவாரம் சென்றபின்னரே, இந்நிலை அடையும். குழந்தை