62
இயல்பாக இருந்தது. அச் சமயங்களில், “இவ்வாழ்க்கை நடாத்தவும் பிள்ளைகளைத் தக்கவழியில் வளர்க்கவும், சமயம் நேர்த்துழி வேறு பல துறைகளில் இயங்கிக் கடனாற்றவும் பெண் மக்கள் பலதிறக் கலைஞானம் பெறுதல் இன்றியமையாமை” என்ற ரீதியில் நடை புரண்டோடும்.
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு, முருகன் அல்லது அழகு, முடியா? காதலா? சீர்திருத்தமா? போன்ற பவ நூல்களை திரு.வி.க. இயற்றியுள்ளார்.
இந்நூற்றாண்டின் முதற் பகுதியில், பரிதிமாற் கலைஞன் என்னும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், மு. இராகவ அய்யங்கார், வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், சோமசுந்தர பாரதியார் உமாமகேசுவரன் பிள்ளை முதலிய பேரரறிஞர்கள் உரைநடை வல்லுநர்கள் என்று சிறப்புப் பெற்றிருந்தார்கள். தங்கள் உரைநடை மூலம் தமிழை வளம் செய்து பெருமையுற்ற இவர்கள் அனைவரும் தங்களுடைய புலமையை வெளிப்படுத்துவதற்காகவே வசனத்தைக் கையாண்ட பெரும் பண்டிதர்களாக விளங்கினார்கள். இவர்களுடைய உரைநடையின் தன்மைகளை அறிய ஆசைப்படுகிறவர்கள், இப்பேரறிஞர்கள் எழுதிய நூல்களைத் தேடிக் கண்டு படித்தின்புறுவார்களாக.