உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுவை முரசு - 1930

பெரியார் ஈ.வெ.ராவின் தன்மான இயக்கத்தில் தொடர்பும் ஈடுபாடும் ஏற்பட்ட பிறகு பாரதிதாசன் துவக்கிய ஏடு புதுவை முரசு. பெரியாரின் கருத்துக்களைப் பரப்புவதற்காகவே இந்த ஏடு தோற்றுவிக்கப்பட்டது. பாரதிதாசன் நண்பர்களான நோயேல், எஸ். சிவப்பிரகாசம் போன்றவர்களின் பெயர்கள் ஆசிரியர்களாக அச்சிடப்பட்டிருந்தாலும், அதன் உண்மையான ஆசிரியர் இவரே! தன்மான இயக்கத்தின் மத எதிர்ப்புக் கொள்கையை இவ்வேடு தீவிரமாகக் கடைப்பிடித்தது. பிரெஞ்சு அரசின் ஆதரவோடு புதுச்சேரியில் ஆதிக்கம் செலுத்திவந்த கத்தோலிக்கக் குருமார்கள் 'புதுவை முரசின் ஆசிரியராக அப்போதிருந்த நோயேல் மீது வழக்குத் தொடர்ந்தனர். நோயேல் பொறுப்பாசிரியர் பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்ப்பட்டது. பிறகு பாரதிதாசன் மாணவரான எஸ். சிவப்பிரகாசம் ஆசிரியர் பொறுப்பேற்றார். அவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. அதனால் அவரும் அப்பொறுப்பிலிருந்து விலகினார். 'சுயமரியாதைச் சுடர்' என்ற நூலை எழுதி வெளியிட்ட போது அந்நூலில் 'புதுவை முரசின் ஆசிரியர் திரு. எஸ். குருசாமி பி.ஏ. அவர்கட்குச் சமர்ப்பணம்' என்று குறிப்பிட்டு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் பாரதிதாசன். இதனால் ஒரு குறுகிய காலத்துக்குப் புதுவை முரசின் ஆசிரியராகத் திரு.எஸ். குருசாமி அவர்களும் இருந்திருப்பார் என்று தெரிகிறது. பாரதிதாசன் இதன் ஆசிரியராக இல்லாவிட்டாலும் கே.எஸ்., நாடோடி, அடுத்த வீட்டுக்காரன், சுயமரியாதைக்காரன், வழிப்போக்கன், கிண்டற்காரன், உண்மை உரைப்போன் போன்ற புனை பெயர்களில் தலையங்கம், கவிதைகள், கட்டுரைகள், விகடத்துணுக்குகள், மதிப்புரைகள், எழுதிவந்தார். இடையில் ஏற்பட்ட மத எதிர்ப்பாலும், வேறு பல சிக்கல்களாலும் புதுவை முரசு நின்றது.

ஸ்ரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் - 1935

'கனக சுப்புரத்தினம் கவிபாட வல்லவன்' என்று நண்பர்கள் எதிரில் முதன் முதலில் பாரதி கூறியபோது 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்ற பாடலைச்சுப்புரத்தினம் பாடினார். அப்பாடல் "ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த சுப்புரத்தினம் எழுதியது" என்ற பரிந்துரையுடன் சுதேசமித்திரன் இதழுக்கு