பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வியும் ஆசிரியப் பணியும்

13

கல்வியுள் ளவரே இளமை கழிந்திடில்
கண்ணுள்ளார் என்னலாம் ஏறுமோ கல்விதான்
கல்வியில் லாதவர்கண் இப்பொழு தேயுண்
புண்ணென்றே பண்ணலாம் இனித்தி டும்தேன்

கவிஞர் பாடம் நடத்துவதோடு மாணவர்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டுவதில் ஈடு இணையற்றவர். புதுவை சுயர் கூப் வீதித் தொடக்கப் பள்ளியில் சுப்புரத்தினம் ஆசிரியர் பணியாற்றும் போது குறிப்பிடத் தக்க ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் வழக்கம் உண்டு.

ஒரு நாள் பகல் உணவு பரிமாறப்பட்டபோது, மாணவர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. சுப்புரத்தினம் மாணவர்களை அணுகிக் காரணம் வினவினார். மாணவர்கள் "முசியே! சாம்பாரு கசப்புங்க!" என்று சொன்னார்கள். (முசியே' என்ற பிரெஞ்சுச் சொல்லுக்கு 'ஐயா' என்பதுபொருள்) சுரைக்காய் சாம்பார். உடனே அதைச் சுவைத்த சுப்புரத்தினம் சமையற்காரரைக் கடுமையாகக் கடிந்து கொண்டார் உடனே மாணவர்களை வரிசையாக நிறுத்திக் கல்வித்துறைத் தலைவரின் அலுவலகத்துக்கு இட்டுச் சென்று. இக்கொடுமையை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியை விவரமாகக் கேட்ட கல்வியதிகாரி உடனே தம் உதவியாளரை அழைத்து வேண்டுவன செய்யும்படி ஆணையிட்டார். சுப்புரத்தினத்தின் கடமை உணர்வை மிகவும் பாராட்டி "மாணவர்களை அழைத்துச் செல்லுங்கள், பொது நோக்குடன் ஆசிரியப் பணி புரியும் உங்களைப் பாராட்டுகிறேன். இனி அடிக்கடி என்னைச்சந்திக்க வாருங்கள்" என்று பரிவுடன் பேசி அனுப்பினார். அவர் பணியில் இருக்கும்வரை சுப்புரத்தினத்துக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டாள்.

புதுவையில் பிரெஞ்சு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் எப்போதும் போட்டியாகத்தான் இருக்கும்.

பிரெஞ்சு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் புதுவை அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள் அவர்களுக்குச் சம்பளமும் அதிகம்; தமிழ் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் குறைவு. எனவே இவர்களுக்குள் எப்போதும் போட்டி பொறாமை அதிகம் இருக்கும்.