பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பாரதிதாசன்


உணவு, உடை, மருத்துவம் ஆகியவற்றிலும் வெள்ளையரைப் பின்பற்றி வந்த இழிநிலையை, ஒத்துழையாமை இயக்கம் வன்மை யாகக் கண்டித்தது. பாரதிதாசனும் இப்பண்பாட்டுச் சீரழிவை 'நீசநாகரிகம்' ஸ்வதர்மம் முதலிய பாடல்களில் கண்டிக்கிறார்.

வெள்ளைத்துரை உடைபோலுடுப்பீர்மயிர்
வெட்டிக் கொள்வோம் தமிழ் துப்பிச் செல்வோம் - எனத்
துள்ளுது மற்றொரு நாகரிகம் இதில்
சொக்குதல் பற்பலர் பாரதமே.
செந்தமிழிற்பெயர் இட்டறியாக் கொடு
தேயிலை காப்பியை முப்பொழுதும் உண்டு
வந்தனை செய்யென நாகரிக மொன்று
வல்லமை காட்டுது பாரதமே.

வெள்ளை வயித்தியம் தெய்விகமாம் - அதை
வேண்டி அழைப்பது செய்தவமாம்
உள்ள மகிழ்ந்து குதிக்குதிங்கே - புலை
ஊனர் விரும்பிய நாகரிகம்

என்று கடுமையாகச் சாடுகிறார்.

"பணம் படைத்தவர்கள் பசுக்களைக் காப்பதில் சேவையுணர்ச்சி யோடு ஈடுபட வேண்டும். சுயலாபமும் சுரண்டலும் இதில் கூடாது. பசு பாலனம் எளிதன்று. அந்நிய ஆட்சியை இந்தியாவிலிருந்து அகற்றுவதைவிட இது கடினமானது" என்று பசுக்காப்புப் பற்றிக் காந்தி அடிகள் கூறியுள்ளார். அக்கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்ட பாரதிதாசன், தமிழ் இலக்கண இலக்கியங்களிலிருந்து 'ஆநிரை' பற்றிக் கூறிய கருத்துக்களை ஒரு கட்டுரையிலும் பாடலிலும் விளக்கியுள்ளார்.

மடியினில் பால்சுமந்தே
மாந்தருக் களித்திட வருகின்ற தாய்

என்றும்,