உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நவதந்திரக் கதைகள்

161

இவளைப் பிடித்துக் குண்டோதர சிங்கர் அடைத்து வைத்திருக்கிறார் என்ற செய்தி கேட்டால், அவன் உடனே கதம்ப வனத்தின்மீது படையெடுத்து வருவான். அவன் படை யெடுத்து வந்தால் அவனை எதிர்த்துப் போர் செய்ய நமது சைந்நியத்தால் முடியாது. நமது ராஜ்யம் அழிந்து போய்விடும். ஐயோ! வீரவர்மனை எதிர்த்தபடியாலே தண்டிராஜன் பட்ட பாடும், அவன் தம்பி உத்தண்டி இப்போது படுகிற பாடும் தெரியாதா? மகாராணிதானே நீயும் நானும் இணைபிரியாமல் இரண்டு பக்ஷிகள் ஒரு கூட்டில் வாழும் முறைமையாலே, இருவரும் அன்பாகிய கூட்டில் வாழ்ந்து பல வருஷங்களாக ஒன்றுகூடி இருக்கிறோம். சூரியனுக்கும் குளப்பூவுக்கும் சிநேகமுண்டாகும்போது அவ்விரண்டுக்கும் சமானத் தன்மை உண்டாகிறது மேலும் கீழும் அன்பினால் சமத்துவத்தை அடைகின்றன. உன்னைப் போல குலத்திலும், நலத்திலும், மகிமையிலும் சிறந்த சிங்கச்சிமார் எத்தனையோ பேர் உலகத்தில் இருக்கக்கூடும். உனக்கு அவர்கள் எல்லோரையும்விட என் மேலே அதிக அன்பு உண்டாயிருக்கிறது. நான் கீழ்க் குலத்திலே பிறந்தாலும், எப்போதும் என் கண்களில் பதுமை போலே உன்னை வைத்துக் கொண்டு போற்றுவதனால்; நான் மகிமை பெற்று உன்னுடைய அன்புக்குப் பாத்திரமானேன். எனக்கு மகத்தான கஷ்டம் நேரிட்டிருக்கும்போது. நீ சகித்திருப்பது நியாயமன்று. எனக்கு நீயே துணை, நீயே தோழி, நீயே தாய், தந்தை, நீயே தெய்வம், எனக்கு உன்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு கதி கிடையாது. நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்“ என்று சொல்லிக் கோவென்றலறி அழுதாள். அப்போது சிங்கச்சி சுவர்ணாதேவி அவளைச் சமாதானப்படுத்திவிட்டு உடனே பக்கத்திலிருந்த பாங்கி ஒருத்தியைக் கூவி:—'பெண்ணே, நீ போய் ராயசிங்கரை நான் அழைத்துவரச் சொன்னதாகச் சொல்லு. உடனே கூட்டிவா“ என்றது.

சாயங்காலம்; பொழுது புகுந்துவிட்டது. சிங்க குண்டோதரன் தனது ராஜதானியாகிய கதம்ப நகரத்திற்கு