நவதந்திரக் கதைகள்
163
அப்போது விருத்திமதி சொல்லுகிறாள்:—“ராஜேச்வரா, தங்களுடைய ராஜ்யத்திற்குப் பெரிய விபத்து நேரிட்டிருக்கிறது. தங்கள்மீது வீரவர்மன் படையெடுத்து வரப் போகிறான். இவ்வளவு காலம் இந்த ராஜ்யத்தில் சமாதான மிருந்தது. இப்போது பாழ்த்த யுத்தம் இங்கு வந்து பிரவேசிக்கப் போகிறது. ஐயோ, நாங்கள் என்ன செய்வோம்? குடிகளை எல்லாம் சுவர்ணாதேவி தன்னுடைய பெற்ற குழந்தைகளுக்குச் சமானமாக நினைப்பவளாயிற்றே! அவளுடைய பழக்கத்தால் எனக்கு இந்த ராஜ்யத்தினிடம் அருமையான பக்தி உண்டாய்விட்டதே! என் உயிருக்கு மாத்திரம் தீங்கு வருவதாக இருந்தால் நான் அதைப் பொருட்டாக நினைக்கமாட்டேனே! ராஜ்ய முழுமைக்கும் ஹானி வருகிறதே! ஆஹா! என் செய்வேன்? எத்தனை சுமங்கலிகள் தாலி யறுப்பார்கள்! எத்தனை தாய்மார் பிள்ளை யற்றுப் போவார்கள்! எத்தனை குழந்தைகள் தந்தையற்றுப் போகும்! எத்தனை தாய்மார் பிள்ளைகளைச் சாகக் கொடுத்து எங்கும் தீராத துக்கத்துக்காளாய், பரத்திலும் புத் என்ற நரகத்தில் விழும்படியாகும்! ஐயோ, புத்திரர்களில்லாத பிதாக்கள், புத் என்ற நரகத்துக்குப் போவார்களென்று சாஸ்திரங்கள் திண்ணம் கூறுகின்றனவே! உமது புத்திரர்களே போரில் மடியும்படி நேர்ந்தாலும் நேரிடக்கூடுமே! அப்போது நீர் எப்படி யெல்லாம் கஷ்டப்படுவீரோ, அறிகிலேன். தேவரீ ருடைய பிராணனுக்கே ஆபத்தல்லவா? நாங்கள் என்ன செய்வோம்? இனி நான் சுவர்ணாதேவியின் முகத்தில் எப்படி விழிப்பேன்?” என்று சொல்லிக் ‘கோ’ வென்று விம்மி விம்மி அழுதாள்.
குண்டோதர ராயன்:—”ஏன் அந்த வீரவர்மன் நம்மீது படையெடுத்து வரப்போகிறான்? அதை முதலாவது சொல்லு” என்று உருமினான்.
அப்போது விருத்திமதி;—”தங்களுடைய சிப்பாய்கள் வீரவர்மனுடைய தாய்க்குச் சமானமான செவிலித்தாயைப் பிடித்துச் சிறைப்படுத்தி விட்டார்கள்! இந்த விஷயம் அவன்