உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

பாரதியார் கதைகள்

ஒடிந்து கிடக்கும் மரங்களையும் பார்த்து நிற்கையிலே, குச்சிலுக்குள்ளிருந்து “குவா!” “குவா!“ என்ற சத்தம் வந்தது. உள்ளே போய்ப் பார்த்தாள். அண்ணன் மனைவியாகிய கோமதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து கிடந்தது. விசாலாக்ஷி அதற்கு வேண்டிய சிகிச்சைகளெல்லாம் செய்து கொண்டிருக்கையில், கோமதிக்கு மரணாவஸ்தை நேர்ந்துவிட்டது. அவள் சாகும்போது:— “விசாலாட்சி! விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடனிருக்க மாட்டேன். என் பிராணன் போகு முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்துகொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடியவேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண்மக்களெழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாதத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக, நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது, நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்கு சந்திரிகை என்று பெயர் வை” என்றாள்.

விசாலாட்சி ”சரி” என்றாள். கோமதியின் உயிர் பரலோகஞ் சென்று விட்டது.

விசாலாக்ஷிக்கு கிடைத்த உதவி

சென்ற அத்தியாயத்தில் கூறிய செய்திகள் நிகழ்ந்து சரியான மூன்று வருஷங்களாயின. 1904-ஆம் வருஷத்தின் இறுதி நடைபெற்றது. அப்பொழுது சென்னப்பட்டணத்தில்