உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

பாரதியார் கதைகள்

பார்த்துவிட்டு, அவளை நோக்கி ‘இன்றைக்கென்ன கிழமை?’ என்று தமிழில் கேட்டார். அவள் ‘புதவாரமு‘ என்று தெலுங்கில் மறுமொழி சொன்னாள்.

”மீகு தெலுகு வச்சுனா?” என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.

”அவுனு, சால பாக வச்சுனு” என்றாள் விசாலாட்சி.

இங்கு நமது கதை வாசிப்போரிலே பலருக்குத் தெலுங்கு பாஷை தெரிந்திருக்க வழியில்லையாதலால், அவ்விருவருக்குள் தெலுங்கில் நடைபெற்ற சம்பாஷணையை நான் தமிழில் மொழிபெயர்த்துத் தருகிறேன்.

”உனக்குத் தாய் தந்தையர் இருக்கிறார்களா?” என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.

”இல்லை” என்றாள் விசாலாட்சி.

”அண்ணன், தம்பி, அக்காள், தங்கை—?”

”எனக்கு யாருமே இல்லை. அதாவது, என்னுடைய விவகாரங்களிலே கவனம் செலுத்தி என்னைக் காப்பாற்றக்கூடிய பந்துக்கள் யாருமில்லை. அப்படியே சிலர் இருந்தபோதிலும், நான் இப்போது விவாகம் செய்துகொள்ளப் போவதினின்றும் அவர்கள் என்னை ஜாதிக்குப் புறம்பாகக் கருதி விடுவார்கள் என்று விசாலாட்சி சொன்னாள்.

”உனக்கு என்னென்ன பாஷைகள் தெரியும்?” என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.

”எனக்குத் தமிழ் தெரியும். தெலுங்கு தெரியும். இரண்டு பாஷைகளும் நன்றாக எழுதவும் வாசிக்கவும் பேசவுந் தெரியும்” என்று விசாலாட்சி சொன்னாள்.

”இங்கிலீஷ் தெரியுமா?” என்று பந்துலு கேட்டார்.

”தெரியாது” என்றாள் விசாலாட்சி.