உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

பாரதியார்‌ கதைகள்‌

நோய்களை நன்கு போஷணை செய்து வளர்ப்பதும், அதினின்றும் மரணத்தின் வரவை மிகவும் எளிதாக்கித் தருவதுமாகிய தொழில்கள் பெரும்பாலும் வைத்தியர்களாலேயே செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழி முற்றிலும் உண்மையெனவே நான் நினைக்கிறேன்.

இதினின்றும் வைத்திய சாஸ்திரம் பொய்யென்றாவது, வைத்தியர்களெல்லாருமே தமது சாஸ்த்திரத்தை நன்று கற்றுணராத போலி வேஷதாரிகளென்றாவது மனமறிந்த அயோக்யர்-களென்றாவது, வேண்டுமென்று மனிதனைக் கொல்லுகிறார்களென்றாவது நான் சொல்ல விரும்புவதாக யாரும் நினைத்து விடலாகாது.

வைத்திய சாஸ்திரத்தில் எத்தனையோ கண்கண்ட பயன்களிருப்பதை நான் அறிவேன். வைத்தியர்களிலே பலர் தமது சாஸ்த்ரத்தில் உண்மையான உயர்ந்த தேர்ச்சியுடையோராகவும் ஜீவகாருண்யத்தில் சிறந்த மஹான்களாகவும் இருப்பதை நான் அறிவேன். ஆனாலும், வியாதிகள் பல்குவதற்கும், மரணம் இங்ஙனம் மனிதரைப் பூச்சிகளிலுங் கடையாக வாரிக்கொண்டு போவதற்கும் உலகத்து வைத்தியர்கள் பெரும்பாலும் ஹேதுவாகிறார்களென்ற என் கொள்கை தவறானதன்று. ஒன்றுக்கொன்று விரோதமாகத் தோன்றும் இவ்விரண்டு கொள்கைகளும் எங்ஙனம் ஏககாலத்தில் உண்மையாகுமென்பதைத் தெரிவிக்கிறேன்.

ஆனால், ஏற்கெனவே இந்த அத்தியாயம் மிக நீண்டு போய்விட்டது. நம்முடைய கதையின் போக்கோ சிறிது நேரம் விசாலாக்ஷியையும் விசுவநாத சர்மாவையும் விட்டுப் பிரிந்து வேறு சிலருடைய விருத்தாந்தங்களைக் கூறும்படி வற்புறுத்துகின்றது. ஆதலால் ௸ வைத்தியர் ஸம்பந்தமான விவகாரத்தைப் பின் ஓரத்யாயத்தில் விளக்கிக் காட்டுகிறேன்.