உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

பாரதியார்‌ கதைகள்‌

அழுகை கேட்டுக் கேட்டு எனக்குக் காது புளித்துப் போய்விட்டது. இனிமேல் ஒரு வார்த்தை சொல்லுகிறேன், அதை ஜாக்கிரதையாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டிருங்கள். அதாவது, உங்கள் உடம்பு— சுகமாகவும் ஆராக்கியமாகவும் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். வியாதியிருந்தால் எனக்குச் சொல்ல வேண்டா. இந்த ஒரு தயவு எனக்கு நீங்கள் அவசியமாகச் செய்யவேண்டும்” என்றாள்.

சோமநாதய்யருக்குக் கோபம் பளிச்சென்று வந்துவிட்டது. அவருக்கு முற்கோபம் அதிகம். மனைவியை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார். ”நன்றி கெட்டநாய், முண்டாய், உன் பொருட்டாக நான் படும் பாடு ‘பஞ்சு தான் படுமோ? சொல்லத்தான் படுமோ, எண்ணத்தான் படுமோ?’ நாய் போலே உழைக்கிறேன். கும்பகோணத்தில் நல்ல வரும்படி வந்து கொண்டிருந்தது. இங்கு வந்தது முதல், வரவு நாளுக்கு நாள் குறைவு பட்டுக்கொண்டேயிருக்கிறது. எனவே, உனக்கும் உன் குழந்தைக்கும் சோறு, துணி, மருந்துகள் ஸம்பாதித்துக் கொடுப்பதில் எனக்கு நேரும் கஷ்டங்களும் மன வருத்தங்களும் கணக்கில் அடங்க மாட்டா. நான் முன்பு சேர்த்து வைத்த சொத்தையெல்லாம் விழுங்கி அதற்கு மேல் பதினாயிரம் ரூபாய் வரை கடன் ஏறிப்போயிருக்கிறது. எத்தனையோ பொய்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏமாற்ற வேண்டி யிருக்கிறது. நீதிஸ்தலத்திலே போய் மனமறிந்த பொய்களைச் சொல்வதே நமக்குப் பிழைப்பாய்விட்டது. இந்த வக்கீல் தொழிலும் சரி, வேசைத் தொழிலும் சரி, தர்மத்தைக் கெடுத்து இஹத்தையும் பரத்தையும் நாசம் பண்ணிக்கொண்டு உன் பொருட்டாகப் பாடு படுகிறேன். மேலும் ஒரு வழக்கு ஜயித்தால் பத்து வழக்குகள் தோற்றுப் போகின்றன. அதில் என் மனதுக்கேற்படும் துக்கத்துக்கும் அவமானத்துக்கும் கணக்கில்லை. தவிரவும் இத்தொழிலோ கோர்ட்டிலேனும் கட்சிக்காரரிடமேலும் ஓயாமல் தொண்டைத் தண்ணீரை வற்றடிக்குந் தொழில். அதனால் உடம்பில் அடிக்கடி சூடு மிகுதிப்-