268
பாரதியார் கதைகள்
படுகிறதேயன்றி வேறில்லை. இவள் என்ன காரணத்தால் உனக்கு இத்தனை துச்சமாய் விட்டாள்? துச்ச மனமே? இவளைக் காதலிராணியென்று கொண்ட இடத்தில், உணர்வு, உயிர், உடம்பு என்ற மூன்றும் அவளுக்கே சமர்ப்பணமாகி விட்டனவன்றோ? அவள் ஊடினால் அதுவும் ஓரின்பம். அவள் கூடினால் அதுவும் ஓரின்பம். மேலும், காதலி சொல்லும் வசை மொழிகளெல்லாம் நம்முடைய செவிகளில் அமிர்தம் போல் விழுவதன்றோ? ஆண்மைக்கு லக்ஷணமாம்? காதலிப் பெண் உண்மையாகவே சினங் கொண்டோ அல்லது பொழுது போக்கின் பொருட்டாகவோ, நம்மைத் திட்டினால், நாம் அந்தத் திட்டுக்களையெல்லாம் மிட்டாயென்று நினைப்பதன்றோ புருஷலக்ஷணம்? அங்ஙனமின்றி அவளிடம் எதிர்த்துச் சினங் கொள்ளுதல் பேடித்தன்மையன்றோ? அவள் எது செய்தாலும் அவளே நமக்குத் தெய்வம், அவளே நமக்கு இன்பம். அவள் வலிய வந்து நம்மை முத்தமிட்டபோதிலும், அவளருளே கதி. அவள் நமது தசையை வாளைக் கொண்டு அறுத்தபோதிலும், அதுவே நமக்கு ஸ்வர்க்க போகம்.”
என்று இங்ஙனம் நிலாமுற்றத்தில் நாற்காலியின் மீதுட்கார்ந்து நிலவை நோக்கி ஆலோசனை செய்து கொண்டிருந்த சோமநாதய்யர் அப்படியே நித்திரையில் ஆழ்ந்து விட்டார். பிறகு அவர் கண்ணை விழித்துப் பார்க்கையிலே, சந்திரன் உதித்த இடத்தினின்றும் நெடுந்தூரம் விலகிவந்திருப்பது கண்டார். மாலையில் சுமார் ஏழுமணிக்கு முத்தம்மா காபி போட்டுக் குடித்துவிட்டு வருவதாகச் சொல்லி விட்டுக் கீழே போனாள். இப்போது மணி எத்தனையிருக்குமென்று அவர் தம்முடைய சட்டைப் பையிலிருந்த கைக்கடிகாரத்தை எடுத்து நோக்கினார். நடுநிசி, பன்னிரண்டு மணி யாய்விட்டது. படுக்கையறைக்குள்ளே போய்ப் பார்த்தார். அங்கு திமிதிமியென்று மண் எண்ணெய் மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு க்ஷணம் இவர் தாமதப்பட்டு வந்திருப்பாரானால் கண்ணாடிக் குழாய் வெடித்துப் போயிருக்கும்.