உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில வேடிக்கைக்‌ கதைகள்‌

271

வாருங்களடா! வெறும் சதை; எலும்பில்லை” என்றான் மனிதர்க ளெல்லாரும் பல விஷயங்களில் குழந்தைகளைப் போலவே காணப்படுகிறார்கள். “வெறும் சதை“யாக இருக்கும் கஷ்டங்களைத் தூரத்திலிருந்து “எலும்புள்ள“ கஷ்டங்களாக நினைத்துப் பிறர் அவதிப் படுவதை நாம் பார்த்ததில்லையா? நாம் அங்ஙனம் அவதிப்பட்டதில்லையா?

கவிராயனும் கொல்லனும்

ரோப்பாவிலே மகா கீர்த்தி பெற்ற கவி யொருவர் ஒரு கொல்லன் பட்டறை வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது பாட்டுச் சத்தம் கேட்டது கவிராயர் உற்றுக் கேட்டார். உள்ளே கொல்லன் பாடிக்கொண்டிருந்தான். அந்தப் பாட்டு அந்தக் கவிராயராலே எழுதப்பட்டது. அதை அவன் பல வார்த்தைகளைச் சிதைத்தும் மாற்றியும் சந்தந் தவறியும் மனம்போன படிக்கெல்லாம் பாடிக்கொண்டிருந்தான். கவிராயருக்கு மகா கோபம் வந்துவிட்டது; உடனே உள்ளே போய்க் கொல்லனுடைய பட்டறையிலிருந்து சாமான்களையும் கருவிகளையும் தாறுமாறாக மாற்றி வைத்துக் குழப்ப முண்டாக்கத் தொடங்கினார்.

கொல்லன் கோபத்துடன்: “நீ யாரடா, பயித்தியம் கொண்டவன், என்னுடைய சாமான்களை யெல்லாம் கலைத்து வேலையைக் கெடுக்கிறாய்?” என்றான்.

“உனக்கென்ன?“ என்று கேட்டார் கவிராயர்.

“எனக்கென்னவா! என்னுடைய சொத்து, தம்பீ என்னுடைய ஜீவனம்!“ என்றான் கொல்லன்.

அதற்குக் கவிராயர்: “அது போலவே தான், என்னுடைய பாட்டும். நீ சில நிமிஷங்களுக்கு முன்பு பாடிக்கொண்டிருந்த பாட்டை உண்டாக்கிய கவிராயன் நானே; என்னுடைய