உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

பாரதியார்‌ கதைகள்‌

“அடா, வேணு முதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்வரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணு முதலி, பார்! பார்! பார்!”

இங்ஙனம் குள்ளச் சாமி சொன்னவுடன் நானும் வேணு முதலியும் அவரை உற்றுப் பார்த்தோம்.

குள்ளச் சாமி நெடிய சாமி ஆய்விட்டார்.

நாலே முக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச் சாமியார் ஏழேமுக்கால் அடி உயரம் வளர்ந்துவிட்டார்.

ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப் போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப்போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன்போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் பார்வதியைப் போலவே இருந்தது. குனிந்தால் பிள்ளையார் போலிருந்தது. நிமிர்ந்து பார்க்கும்போது விஷ்ணுவின் முகத்தைப் போலவே தோன்றியது. அப்போது குள்ளச் சாமி சொல்லுகிறார்:

அடா, வேணு முதலி, கேள். நான் ஹிந்துஸ்தானத்து யோகிகளுக்கெல்லாம் தலைவன், நான் ரிஷிகளுட்குள்ளே முதலாவது ரிஷி. நான் தேவர்களுக்கெல்லாம் அதிபதி. நானே பிரம்மா, நானே விஷ்ணு, நானே சிவன், நான் ஹிந்துஸ்தானத்தை அழியாமல் காப்பாற்றுவேன். நான் இந்தப் பூமண்டலத்தில் தர்மத்தை நிலைநிறுத்துவேன்.

நான் கிருதயுகத்தை ஸ்தாபனம் செய்வேன். நானே பரமபுருஷன். இதற்குமுன் ஆசாரியர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்? எல்லா உயிரும் ஒன்று. ஆதலால் காக்கை, புழு முதலிய ஜந்துக்களிடம் குரூரமில்லாமல் கருணை பாராட்டுங்கள் என்றனர்.

அடா, வேணு முதலி, கவனி.