பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


கம்பரையும், வள்ளுவரையும் இளங்கோவையும் உள்ளத்திலிருந்து நாமுனையிலே கொண்டுவந்து அமர்த்தி இந்த உலகை ஒரு சுற்றுப் பார்த்தார்.

தாம் கண்டறிந்த மேலைநாடு, கீழைநாடு, வடநாட்டுப் புலவர்களில் மேம்பட்டவர்கள் எல்லாரும் தென்பட்டனர். அவர்களை இம்மூவரோடும் ஒப்பிட்டுப் பார்த்து ஒதுக்கி விட்டுப் பேசினார்.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை”

-என்று முழங்கிப் பாடினார். மூலை முடுக்கெல்லாம் சென்று மூட்டிய இம் முழக்கங் கேட்டு ஒரு மூலையிலிருந்து ‘என்ன’ என்று ஒரு முனகல் கேட்பதாக உணர்ந்தார் போலும். உடனே ‘உண்மை’ என்று ஒரு முத்திரை வைத்தார். ‘அப்படியோ!’ என்றொரு மறுப்புக் குறியைக் கண்டார் போலும், ‘வெறும் புகழ்ச்சியில்லை’ என்று அந்த முத்திரைக்கு அரணிட்டு முடித்தார்.

உலகப் பார்வையை இழுத்து உள்நாட்டைப் பார்த்தார் பெருமிதமெல்லாம் குலைந்தது. அம்மூன்று புலவர்க்கும் அருந்தமிழர்க்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தார்; தலை கவிழ்ந்தார். ‘அந்தோ’ இப்பெரும் புலவர்கள் வழங்கிய பேழைகளின் அணிகளை அணுகாமலும், அணியாமலும், மகிழாமலும் உள்ளனரே' என்று கவன்றார். அவ்விலக்கியங்களின் சுவையை வாயாரப் பேசுகின்றிலரே; செவியாரக் கேட்கின்றிலரே; கண்ணாரக் காண்கின்றிலரே என்று ஏங்கினார். தானும் அவர்களோடு சேர்ந்து நிற்பவராய்க் கொண்டு பாட்டைத் தொடர்ந்தார்.

7