பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


பேசவேண்டும் என்கிறார். வள்ளுவரது அறவுரை இலக்கியத்தைச் செவியாரக் கேட்டு அக்கேள்வியறிவால் வாழ்வைச் செம்மை செய்து கொள்ளவேண்டும் என்கிறார். இளங்கோவடிகளது நாடக இலக்கியத்தை மனக்கண்குளிரக் கண்டு மகிழ வேண்டும் என்கிறார்.

இந்நூல்களை இவ்வாறு பயின்று பயன் கொள்ளாமல் தமிழர் ஊமையும் செவிடும் குருடும் ஆகிக் குறை மனிதர் ஆயினர்; நிறை மனிதத் தன்மையை இழந்தனர்; இழந்து ‘பாமரராய், விலங்குகளாய்’ ஆயினர் என்று கண்டார்.

இவ்வைைகயாய்த் தமிழர் பான்மை கெட்டுப் போதல் கூடாது; நலம்பெற வேண்டும் என்னும் தனது ஆர்வத்தினைத் தமிழர்க்கு உணர்த்த எண்ணி மிகக் கனிவோடு,

“ஒரு சொற் கேளிர்”
- என்று வேண்டுகின்றார்.

வேண்டி, சேமம்- நலம்பெற வழிசொல்வாராய்,

“சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கஞ் செழிக்கச் செய்வீர்"
-என முடித்துக் காட்டுகிறார்.

‘தமிழர் நலம்பெற வேண்டுமென்றால் தமிழ் இலக்கியங்களைப் பயில வேண்டும்; பயின்றவற்றைத் தெருவில் உள்ளோர்க்கெல்லாம் பயிற்றிப் பரப்பு வேண்டும்; பரப்பித் தமிழ் முழக்கத்தை எழுப்ப வேண்டும்’ என்பது பாரதியின் பேரவா. இவ்வொரு பாடலின் முற்பகுதியில் இலக்கியத்

9