பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 அ. ச. ஞானசம்பந்தன்

தோன்றிய காலத்தை வென்று, நின்று பாடக் கூடியவன் என்றாலும், அவன் எந்தக் காலத்தில் தோன்றுகிறானோ அந்தக் காலத்தின் சாயை அவனுடைய இலக்கியத்தில் காணப்படாமல் போகாது, தன்னுடைய கால நிலையை உணர்ந்து இலக்கியம் படைக்காமல் அறவே விட்டு விடுகின்ற கவிஞன் மக்கள் தொடர்பு இல்லாதவனாகி விடுவான். மக்கள் தொடர்பு இல்லாத கவிஞன் சிறந்த கவிதைகள் இயற்றினாலும் அக்கவிதைகள் மக்களால் போற்றி ஏற்றுக் கொள்ளப் பெறுவதில்லை. எனவே, அரசியல் வானிலும் சமுதாய உலகிலும் பெரும் புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கவிஞன் ஒருவன் தோன்றுவானேயானால், அவனுடைய கவிதை இந்த அரசியல், சமுதாயப் புரட்சிகட்கு இடந்தாராமல் இருக்க முடியாது. இந்த அடிப்படையை நன்கு உணர்ந்து கொண்டால் பாரதி, பாரதிதாசன் என்ற இருவரும் இத்தகைய கவிதைகள் இயற்றுவதற்குரிய நிலைக்களத்தை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

இவ்விருவரில் பாரதி அரசியல் விடுதலை வேட்கை அதிகம் பெற்றவராக அதற்குரிய பாடல்களை மிகுதியும் பாடியுள்ளார். அவரின் இளையவராய் அவருடைய அன்பார்ந்த தோழராய் அமைந்த புரட்சிக் கவிஞர். சமுதாய விடுதலையில் நாட்டம் அதிகம் செலுத்தினார். எனவே, அவருடைய பாடல்களில் சமுதாயப் புரட்சி மிகுதியாக இடம் பெற்றது. பாரதியைப் பொறுத்தமட்டில் இளமையில் பெற்ற துன்பங்களும், மறுவேளைச் சோற்றுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று கலங்கிய கலக்கமும், அலாகாபாத், காசி போன்ற இடங்களில் சென்று