பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும் 8

என்ற வினா தோன்றலாம். ‘உறுதியாகக் குறையும்’ என்ற விடையும் கிடைக்கும். ஆனால், கூழுக்கும் ஆசைப்பட்டு மீசைக்கும் ஆசைப்படுவதில் அர்த்தமில்லை. ஒன்று, இரசிகர்கள், திறனாய்வாளர்கள் என்பவர்கள் பற்றிக் கவலைப்படாமல் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகட்குத் தோன்றிய முறையில் வடிவு கொடுக்க முற்பட வேண்டும்; அல்லது ஓரளவு இரசிகர்களுக்கும் மன நிறைவு தருகின்ற முறையில் தன்னுடைய கலையைப் படைக்க வேண்டும். இந்த நோக்கில் கலைஞர் இருவகைப்படுவர்: முதலாவது வகையினர் உலகைப் பற்றிக் கவலைப்படாத கலைஞர்கள்; இரண்டாவது வகையினர் ஓரளவு விட்டுக் கொடுத்து வாழ்கின்ற இயல்பு படைத்த கலைஞர்கள். முதல் வகையினர் யாரைப் பற்றியும் கவலைப்படாமையின் நாமும் அதுபற்றி ஒன்றுங் கூற வேண்டா. அக்கலையை அனுபவிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தடையின்றி அனுபவிக்கலாம்; ஏனையோர் அதுபற்றி ஒன்றும் பேசத் தேவை இல்லை.

நாடு விடுதலையான பிறகு சென்ற கால் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் முன்னேறியுள்ளது என்பதில் ஐயமேயில்லை. சிறுகதை, புதினம், கவிதை, உரைநடை, நாடகம் என்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான், வளர்ச்சியுங்கூடச் சொல்லப்பட்ட வரிசை முறையிலேயே வளர்ந்திருக்கக் காண்கிறோம். அதாவது, சிறுகதை முதன்மையாகவும் நாடகம் கடைசியாகவும் வளர்ந்திருக்கக் காண்கிறோம்.

வளர்ச்சி என்று கூறியவுடன் அளவாலா, தரத்தாலா என்ற வினாத் தோன்றும். இலக்கியப்