பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முகவுரை,

நமது தமிழ் மொழி சிறந்த இலக்கண வரம்புடையது. தமிழ் மொழி கற்கப் புகும் மாணவர்கள் கீழ் வகுப்புக்களிலிருந்தே இலக் கன அறிவு பெற முயல வேண்டும். பெறாவிடில் பின்பு அவர்கள் செய்யுட் பாடங்களைப் படிப்பதிலும், வசன நடைகள் எழுதுவதிலும் பல இடர்ப்பாடுகளை அனுபவிக்கவேண்டி வரும். இம் முறையைக் கைக்கொள்ளாத காரணத்தினாலேயே கல்லூரி (college Students) மாணவருள்ளும் பலர் தமிழ் வசன நடையைச் சந்திவழூ, பால் திணை முடிபு வழூக்களின்றி எழுதி முடிக்க இயலாது இடர்ப்படுதலைக் கண்கூடாகக் காண்கின்றோம்.

இக் குறைகள் நம் மாணவர்களிடத்தினின்றும் அகலவேண்டுமாயின் அவர்கள் அடிப்படையாகக் கீழ் வகுப்புக்களி லிருந்தே இலக்கண பாடங்களைப் போற்ற வேண்டும். அவர்கட்கேற்ற சுலபமான இலக்கண பாட புத்தகங்கள் பல படிப்படியாகப் பல்க வேண்டும்.

யான் இவை கருதியே இலக்கண நூலில் முதலாவதாக அறிய வேண்டிய எழுத்து, சொல் என்ற பாகு பாட்டில் இளைஞர்க்கு வேண்டிய பகுதிகள் எவையோ அவற்றை மாத்திரம் எடுத் துத் தற்காலத்தில் வேண்டப்பெறும் புதிய முறையில் சுலபமாகவும், விளக்கமாகவும் அமைத்துத் தகுந்த உதாரணங்களோடும், பயிற்சிகளோடும் எழுதி, இந்தப் பால போத இலக்கண மென்னும் சிறிய நூலை வெளிப்படுத்தியுள்ளேன். இது பால போத இலக்கண வரிசையில் (Elementary Grade in Grammar) முதற் புத்தகமாகும்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் சிறுவர்கள் தமிழ் இலக்கணப் பயிற்சியும், இலக்கண பாடங்களில் உற்சாகமும் பெற்று விளங்குவார்கள் என்பது எனது துணிபு.

இங்ஙனம்,
ஆ.கார்மேகக் கோன்