கலகங்கள்
55
1936ம் வருஷம் ஏப்ரல் மாதம் 15ந் தேதியிலிருந்து 19ந் தேதிக்குள், ஜாபா நகரத்திலும், அதற்கருகாமையிலுள்ள டெல்—அவீவ் நகரத்திலும் அராபியர்களுக்கும், யூதர்களுக்கும் சில்லரைச் சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. இதனால், பாலஸ்தீனத்தின் மற்றப் பாகங்களிலுள்ள அராபியர்களுக்கு ஒரு வித ஆத்திரம் உண்டாயிற்று. ‘நாப்ளுஸ்’ என்ற நகரத்தில் கூடிய ஒரு கூட்டம், பொது வேலை நிறுக்கம் நடத்த வேண்டுமென்று தீர்மானித்தது. இதற்காக ஒரு கமிட்டியும் தெரிந்தெடுக்கப்பட்டது. இங்ஙனமே, அராபியர்கள் வசிக்கும் எல்லா நகரங்களிலும் கமிட்டிகள் நியமிக்கப்பட்டன. யூதர்கள் குடி புகுவதைத் தடுக்க வேண்டுமென்றும், அவர்களுக்கு நிலங்கள் விற்கப்படுவதை நிறுத்த வேண்டுமென்றும், தேசீய அரசாங்கத்தை உடனே ஏற்படுத்த வேண்டுமென்றும் இந்தக் கமிட்டிகள் பலவும் தீர்மானங்கள் நிறைவேற்றி, அரசாங்கத்திற்கு அனுப்பி வந்தன. இங்ஙனம், கமிட்டிகள் ஆங்காங்குத் தனித் தனியாக வேலை செய்து வருவது சரியில்லையென்று கருதி, 1936ம் வருஷம் ஏப்ரல் மாதம் 25ந் தேதி ‘அராபிய பெரிய கமிட்டி’ (Arab Higher Committee)யொன்று ஸ்தாபிக்கப்பட்டது. இதனை ‘மத்திய காரியக் கமிட்டி’யென்று சொல்லலாம். இதில் ‘இஸ்கிக்ளாலிஸ்டுகள்’ உள்பட எல்லா அராபியக் கட்சியினரும் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தார்கள். இதன் தலைமைப் பதவி ஜெருசலேம் நகரத்தின் ‘கிராண்ட் மப்டி’ (Grand Mufti)யாகிய ஹாஜ் அமீன் எல் ஹுஸேனிக்கு அளிக்கப்பட்டது. பாலஸ்தீனத்திலுள்ள